1990ஆம் ஆண்டு குருக்கள்மடத்தில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று (25) திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ. ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
1990ம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துக்கொண்டு, கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணித்த முஸ்லிம் யாத்திரிகர்கள், ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து கொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் AMM. ரவூப் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில், சம்பவ இடத்தில் புதைக்கப்பட்டிருக்கும் மனித எச்சங்களை தோண்டி எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி காவல்துறை மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை இன்று பார்வையிட்ட நீதிபதி ரஞ்சித்குமார், அப்பகுதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளப்படுத்தியதுடன், அதனை பாதுகாப்பு வலயமாக அறிவித்து, காவல்துறையினரால் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீள் விசாரணைக்காக நாளை (26) காலை 9.30 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.