Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

இலங்கையில் 37 நாட்களுக்கான பெற்றோல் கையிருப்பில் உள்ளது

Posted on February 28, 2026 by Admin | 399 Views

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா உறுதிப்படுத்தியுள்ளார்.

போர்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அதிகளவில் எரிபொருள் சேமித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விளக்கமளித்த அவர் எரிபொருள் விநியோகத்தில் எந்தவித இடையூறும் இல்லை என்றும் தேவையற்ற பதட்டம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி நேரடியாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கப்பல் கட்டணம் மற்றும் தூரச் செலவு அதிகமாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்றார்.

தற்போது நாட்டில் 37 நாட்களுக்கு தேவையான பெற்றோலும், 35 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாகவும், 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருளும் சேமிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக கப்பல்கள் வராத சூழ்நிலையிலும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும் என அவர் உறுதியளித்தார்.

மசகு எண்ணெய் இறக்குமதியில் மட்டுமே சாத்தியமான பாதிப்பு இருக்கலாம் என்றாலும் அதற்கும் ஒரு மாதத்திற்கு போதுமான கையிருப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனவே வதந்திகளை நம்பி தேவையற்ற அச்சத்தில் ஆழாமல் வழமையான முறையில் எரிபொருள் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.