Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஈரானிய கப்பலை திருகோணமலைக்கு கொண்டு வர ஜனாதிபதி நடவடிக்கை

Posted on March 6, 2026 by Admin | 262 Views

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை தற்போது கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு வருவதற்கான தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

சர்வதேச மோதல்கள் ஏற்படும் சூழ்நிலைகளில் இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்வழிப் பரப்பை எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவாக பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்பதை ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.

எந்தவொரு சர்வதேச மோதலிலும் இலங்கை நடுநிலை நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கும் எனவும் நாட்டின் நிலப்பரப்பு அல்லது வளங்களை மற்றொரு நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் இரண்டு கப்பல்கள் தொடர்பான பிரச்சினையிலும் இலங்கை அதே நடுநிலை அணுகுமுறையையே பின்பற்றி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நடுநிலை கொள்கையை பாதுகாப்பதுடன் மனிதநேயத்திற்கு முதன்மை அளிப்பதும் அரசின் கடமையாகும் என அவர் வலியுறுத்தினார். மனித உயிர்களை பாதுகாப்பதற்கும் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இலங்கை தயங்காது என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஒரு நாடு பின்பற்ற வேண்டிய சிறந்த கொள்கை நடுநிலையும் மனிதநேயத்தையும் இணைத்த அணுகுமுறையே எனவும் அதனை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.