Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

இலங்கை கடல் எல்லை அருகே ஈரான் கப்பல் மீதான அமெரிக்க தாக்குதலை இலங்கை ஏற்கனவே அறிந்திருந்ததா?

Posted on March 10, 2026 by Admin | 326 Views

இலங்கை கடல் எல்லைக்கு அருகில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எந்தவிதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நேற்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வழங்கவில்லை என குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையில் போர்நிலை நிலவும் சூழலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் அதனை மூன்றாவது நாட்டிற்கு முன்கூட்டியே அறிவிப்பது வழக்கமல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “இரண்டு நாடுகள் போரிடும் சூழலில், ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தாக்கப்போவதாக மூன்றாவது நாட்டிடம் முன்னதாக தெரிவிக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதனால் இலங்கைக்கும் அத்தகைய தகவல் வழங்கப்படவில்லை” என்றார்.

அதே நேரத்தில் சம்பவம் நடைபெற்ற கடல் பகுதியில் சில சடலங்களும் உயிர்காக்கும் அங்கிகளும் மிதந்து கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இலங்கையின் கடல்சார் மீட்பு மையத்திற்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த இடத்தில் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். சில சடலங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்த முதல் தகவல் துல்லியமாக எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.