Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 17, 2026

உதுமாலெப்பை எம்பியின் பெருநாள் வாழ்த்து செய்தி

Posted on March 20, 2026 by Admin | 259 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர் )

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தனது ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இஸ்லாம் என்பது மதம் அல்ல அது ஒரு மார்க்கம். அது வாழ்க்கைக்கான வழிகாட்டி. தியாகங்களாலும் அர்ப்பணிப்புகளாலும் வளர்க்கப்பட்டது. மனித இனமும் ஜின்களும் இறைவனை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை என்கிறது புனித அல்குர்ஆன். அதன் அடிப்படையில் புனித ரமழான் மாதம் என்பது மாதங்களில் மட்டுமல்ல மனித உள்ளங்களிலும் புனிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இறைவனால் உருவாக்கப்பட்டது.
ரமழான் மாதத்தில் உள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் அது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு ஒளியாக அமைகிறது.அதனை முஸ்லிம்களாகிய நாம் மிகக் கவனமாகவும் கரிசனையோடும் செயற்படுத்த வேண்டும்.

சுமார் ஒரு மாத காலம் நோன்பிருந்து நாள் முழுவதும் இபாதத் என்கின்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு இறைவனின் திருப்தியை மட்டுமே நோக்காக கொண்டு பலனை அடைந்து கொள்ளக்கூடிய உன்னத மாதம்.

ஏழைகளின் பசியை வசதி படைத்தவர்களும் உணர வேண்டும் என்ற இஸ்லாத்தின் உன்னத நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த புனித மாதத்தில் அனைத்து செயற்பாடுகளும் அமைந்து விடுகிறது அல்ஹம்துலில்லாஹ்.கண்ணியம், ஒழுக்கம்,கட்டுப்பாடு, இறை திருப்பி போன்ற உன்னத செயற்பாடுகளை இந்த மாதம் முழுக்க வளர்த்துக் கொள்கின்ற நாம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவற்றை கடைப்பிடித்து ஒழுக வேண்டியது நமது தலையாய கடமையாகிறது.

இறைவனின் அருளால் நாம் திருப்திபட்ட நிலையில் இந்த ரமழான் மாதத்தை கடந்து வருகின்ற நிலையில் நமது உடன்பிறப்புகள் காசாவிலும் ஈரானிலும் அல்லாஹ் எழுதியபடியான வெற்றிக்குரிய நாள் வரும்வரை எதிரிகளின் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டு சொல்லொணா துயரங்களையும் இன்னல்களையும் அனுபவித்து வலிகொண்ட பெருநாளை எதிர்கொள்கின்றனர். இன்றைய நாட்களில் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற சர்வாதிகார வல்லரசுகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களுக்கு நமது சமூகம் பலியாகிறது. சென்ற ரமழான் மாதம் முழுவதும் நமது பலஸ்தீன் மக்கள் அனுபவித்து வந்த இன்னல்களுக்குரிய கூலியை இறைவன் நிச்சயம் வழங்க நாம் எல்லோரும் இப்புனித நாட்களில் அவர்களை நமது பிரார்த்தனைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நமது நேரான எண்ணங்களையும் நல்லமல்களையும் பொருந்திக் கொள்ள இறைவனை பிரார்த்திப்பதோடு அனைவருக்கும் சுகமான ஈத்துல் ஃபித்துர் நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.