Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஹிஸ்புல்லாஹ் எம்பி வழங்கிய பெருநாள் வாழ்த்து செய்தி

Posted on March 21, 2026 by Admin | 240 Views


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பதே அதன் உயர்ந்த போதனையாகும்.

புனித ரமழான் மாதத்தின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவு செய்து இன்று மகிழ்ச்சியுடன் ஈதுல் பித்ர் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உடன்பிறப்புக்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. ஒரு மாத காலம் நோற்கப்பட்ட நோன்பானது பசியையும் தாகத்தையும் தாங்குவது மட்டுமல்லாது மனிதனின் மனதையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்தும் உயர்ந்த ஆன்மிகப் பயிற்சியாகும். தன்னடக்கம், கருணை, சகிப்புத் தன்மை, ஏழை எளியவர்களிடம் இரக்கம் காட்டுதல் போன்ற உயர்ந்த பண்புகளை வளர்க்கும் அரிய வாய்ப்பாக ரமழான் மாதம் விளங்குகிறது.

ஈதுல் பித்ர் பெருநாள் நமக்கு மகிழ்ச்சியையும் பகிர்வையும் நினைவூட்டும் ஒரு சிறப்பு நாளாகும். இந்த நாளில் நாம் ஒருவருக்கொருவர் அன்பையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொண்டு, சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் வாழ வேண்டும் என்ற செய்தியையும் இந்த புனித நாள் எடுத்துரைக்கிறது.

பல இனங்களும் பல மதங்களும் இணைந்து வாழும் எமது நாட்டில், ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை மேலும் வலுப்பெற வேண்டும் என்பது எனது விருப்பமாகும். இந்த பெருநாள், அனைத்து இலங்கை மக்களிடையே சகோதரத்துவ உணர்வையும் மனித நேயத்தையும் மேலும் உறுதிப்படுத்தட்டும்.

இஸ்லாம் என்பது அமைதி, கருணை மற்றும் மகிழ்ச்சியை வலியுறுத்தும் மார்க்கமாகும். மனிதகுலம் முழுவதும் அமைதியாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பதே அதன் உயர்ந்த போதனையாகும். ஆகையால் இந்த பெருநாள், உலகெங்கும் அமைதி நிலவவும், மனிதர்களுக்கிடையில் அன்பும் புரிந்துணர்வும் அதிகரிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

இந்த மகிழ்ச்சியான ஈதுல் பித்ர் பெருநாளில், எல்லாம் வல்ல அல்லாஹ் இலங்கை நாடுக்கும் அதன் மக்களுக்கும் அமைதி, ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் அருள்வானாக என்றும், தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் பூரண சமாதானமும் அமைதியும் நிலவச் செய்வானாக என்றும் பிரார்த்திக்கிறேன்- எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.