Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 31, 2026

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்க போர் கப்பல்கள்

Posted on April 13, 2026 by Admin | 302 Views

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடல்சார் முற்றுகையை அறிவித்துள்ள நிலையில் அதனை மீறியும் ஈரானியக் கொடியுடன் கூடிய மூன்று கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்துத் அரபிக்கடலுக்குள் நுழைந்துள்ளதாக ‘மரைன் ட்ரஃபிக்’ (MarineTraffic) தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்ட அறிவிப்பின்படி அமெரிக்க நேரப்படி இன்று காலை 10 மணி முதல் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் முற்றுகை அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானிய துறைமுகங்களுக்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து கடல்சார் போக்குவரத்துகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கை சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு முரணாக அமையக்கூடும் என சட்ட வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிபிசிக்கு வழங்கிய கருத்துகளில் இத்தகைய இராணுவ அடிப்படையிலான முற்றுகை தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தத்திற்குப் பின்னர் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் குறைந்தது 60 கப்பல்கள் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போர்நிறுத்தத்திற்கு முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க உயர்வாகும்.

போருக்கு முன்பாக தினமும் சுமார் 138 கப்பல்கள் இந்த முக்கிய கடல்சார் வழித்தடத்தை பயன்படுத்தியதாகக் கூட்டு கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய அமெரிக்க நடவடிக்கை பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.