Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

ஒரு கிளிக்கில் உங்களது ஒட்டுமொத்த வங்கி பணமும் பறிமுதல் – இலங்கை மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

Posted on April 25, 2026 by Admin | 216 Views

இலங்கையில் வங்கி கணக்குகளை இலக்காகக் கொண்டு செயல்படும் புதிய வகை டிஜிட்டல் மோசடி தொடர்பான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக “.apk” எனப்படும் அபாயகரமான கோப்புகள் மூலம் இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

அடையாளம் தெரியாத தொலைபேசி இலக்கங்களிலிருந்தோ அல்லது நம்பிக்கைக்குரிய நண்பர்களின் பெயரில் வந்தோ அனுப்பப்படும் சந்தேகத்திற்குரிய “.apk” கோப்புகளை பதிவிறக்கம் செய்து திறந்தால் பயனாளியின் மொபைல் சாதனத்தின் கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைக்குச் செல்லும் அபாயம் உள்ளது.

இந்த வகை மோசடிகளில் பயனாளியின் குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வங்கி பரிவர்த்தனைகளுக்கான ஒருமுறை கடவுச்சொற்கள் (OTP) போன்ற முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன. இதன் மூலம் வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை மோசடிக்காரர்கள் அபகரிக்கும் வாய்ப்பு அதிகமாகும்.

மேலும் WhatsApp மற்றும் Telegram போன்ற சமூக ஊடக தளங்கள் வழியாக இந்த “.apk” கோப்புகள் பரவுவதை பொலிஸார் அவதானித்துள்ளனர். திருமண அழைப்பிதழ், மின்சாரக் கட்டணம் அல்லது பரிசுச் சீட்டு போன்ற பெயர்களில் அனுப்பப்படும் இக்கோப்புகள், படம் அல்லது PDF கோப்புகள் எனத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

ஆனால் அவற்றை திறக்கும் போது அவை ஒரு செயலியாக தானாக நிறுவப்பட்டு, பயனாளியின் சாதனத்தில் முழுமையான அணுகலை ஹேக்கர்களுக்கு வழங்குகின்றன. இதன் மூலம் பயனாளிக்கு வரும் தகவல்களை வாசிப்பதுடன், ரகசிய OTP குறியீடுகளையும் திருட முடிகிறது.

இதனைத் தவிர்க்க சந்தேகத்திற்குரிய “.apk” கோப்புகளை ஒருபோதும் பதிவிறக்கம் செய்யவோ திறக்கவோ கூடாது என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மொபைல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது அதிகாரப்பூர்வமான Google Play Store அல்லது Apple App Store போன்ற தளங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மொபைல் சாதனங்களில் உள்ள “Install Unknown Apps” என்ற அமைப்பை முடக்கி வைத்திருப்பதும் முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

இத்தகைய மோசடிகளில் சிக்கியுள்ளதாக சந்தேகமிருந்தால் உடனடியாக வங்கி கணக்குகளை முடக்கி அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவிற்கோ தகவல் வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.