Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

ஆசிரியர்களை ஊக்கப்படுத்தாமல் அச்சுறுத்தும் ஒரு சில வலயக் கல்வி அதிகாரிகள்

Posted on May 17, 2026 by Admin | 138 Views

(பிரதி ஆக்கம் – அக்கரைப்பற்று றுஸானா)

கல்வி மேற்பார்வை வருகை ஏன் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக இல்லாமல் அச்சமாக மாறிவிட்டது?

வலயக் கல்வி அலுவலகத்திலிருந்து வரும் ஒரு சில அதிகாரிகள் அதிகாரத் தோரணையில் நடந்து கொள்வது, ஆசிரியர்களின் பாடக்குறிப்புகளை அலட்சியமாக தூக்கி எறிவது, மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை அவமானப்படுத்துவது, நிற்க வைத்துக் கேள்வி கேட்டு அச்சுறுத்துவது, குறைபாடுகளை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டுவது, மனித மரியாதையை புறக்கணிப்பது. ஆசிரியர்களிடம் பூச்சாண்டி கதை கூறி அவர்களை பயமுறுத்துவது.

“மேற்பார்வை” என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய செயல்கள் பல ஆசிரியர்களின் மனங்களில் ஆழமான காயங்களை ஏற்படுத்துகின்றன. ஒரு ஆசிரியரின் தன்னம்பிக்கையை உடைப்பது மிகவும் எளிது ஆனால் அந்த ஆசிரியரை ஊக்குவித்து முன்னேற்றப் பாதையில் நடத்துவது தான் உண்மையான கல்வித் தலைமைத்துவம்.

மேற்பார்வையா? அல்லது அச்சுறுத்தலா?

பாடசாலைகளுக்கு கல்வி அலுவலக அதிகாரிகள் வருவது தவறல்ல மாறாக அது அவசியமான ஒன்று. கல்வித் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு வழிகாட்டவும், மாணவர்களின் கற்றலை வலுப்படுத்தவும் இந்த வருகைகள் உதவ வேண்டும் ஆனால் சில இடங்களில் மேற்பார்வை என்பது “தவறு தேடும் நடவடிக்கை” என்ற தவறான புரிதலாக மாறிவிட்டது.

வகுப்பறையில் நிற்கும் ஆசிரியர் ஒரு இயந்திரம் அல்ல அவர் உணர்வுகளும் அழுத்தங்களும் கனவுகளும் கொண்ட மனிதர்.

ஒவ்வொரு நாளும் வகுப்பறை ஒரே மாதிரியாக இருக்காது. எல்லா பாடசாலைகளிலும் உள்ள மாணவர்கள் ஒரே மாதிரியான சூழலில் இருந்து வந்து இருக்கமாட்டார்கள். சில நாட்களில் மாணவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். சில நாட்களில் அவர்கள் சோர்வாகவும் சவாலாகவும் இருப்பார்கள். இந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமல் சில நிமிட அவதானிப்பின் அடிப்படையில் ஒரு ஆசிரியரின் முழுத் திறமையையும் தீர்மானிக்க மமதையோடு ஒரு சில கல்வி அதிகாரிகள் முற்படுவது கவலையளிக்கிறது.

ஒரு நல்ல மேற்பார்வையாளர் யார்?

ஒரு நல்ல மேற்பார்வையாளர் ஆசிரியரை பயமுறுத்த மாட்டார் அவரை சிந்திக்க வைப்பார். “நான் அதிகாரி” என்று உணர்த்த மாட்டார்.“நான் உங்களுடன் நிற்கும் வழிகாட்டி” என்று உணர்த்துவார்.

ஒரு குறைபாடு இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவார். “இதை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்?” என்று ஊக்குவிப்பார். ஏனெனில் ஒரு சிறிய பாராட்டுக்கூட சில நேரங்களில் ஒரு ஆசிரியரின் வாழ்நாள் அர்ப்பணிப்பை புதுப்பிக்கும் சக்தி கொண்டது.

இன்றைய கல்வி உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இன்று உலக கல்வி அமைப்புகள் “சிகிச்சை முறை மேற்பார்வை”, “ஆதரவு அடிப்படையிலான வழிகாட்டல்”, “ஆசிரியர் வாண்மை விருத்தி”
போன்ற மனிதநேய அணுகுமுறைகளின் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் ஒரு சில கல்வி வலயங்களில் ஒரு சில கல்வி அதிகாரிகள் தன்னுடைய அதிகார வெறியினை ஆசிரியர்கள் மீது பிரயோகித்து தன்னுடைய அடிமைகளாக வழிநடாத்த முற்படுவது கவலைக்குரியது.

ஓர் ஆசிரியரை மதிப்பது என்பது ஒருவரை மட்டும் மதிப்பது அல்ல. அவரால் உருவாக்கப்படும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தையும் மதிப்பதாகும்.

மேற்பார்வைக்கு செல்லும் கல்வி அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டியவை

ஆசிரியரை மனிதநேயத்துடனும் மரியாதையுடனும் அணுகுதல், வகுப்பறைச் சூழலை முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சித்தல், ஆசிரியரின் பலங்களை முதலில் பாராட்டுதல், குறைகளை தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுதல், இதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம்? என்ற அணுகுமுறையில் வழிகாட்டுதல், ஆசிரியரின் மனநிலையையும் வேலைப்பளுவையும் புரிந்து கொள்ள முயற்சித்தல், மாணவர்களின் கற்றலை மையமாகக் கொண்டு அவதானித்தல், தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை பயன்படுத்துதல், கற்பித்தல் வளங்களை ஆக்கபூர்வமாக மதிப்பீடு செய்தல், நல்ல நடைமுறைகளை எடுத்துக்காட்டி பகிர்ந்து கொள்ளுதல், அச்சமில்லா, சினேகபூர்வமான கலந்துரையாடலை உருவாக்குதல், மேற்பார்வையை “தர நிர்ணயம்” அல்ல, “வளர்ச்சி” என்ற நோக்கில் மேற்கொள்ளுதல்.

ஒரு மேற்பார்வையாளர் செய்யக் கூடாதவை:- 

மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியரை அவமானப்படுத்துதல், அதிகாரத் தோரணையில் பேசுதல், கேலி, ஏளனம் கலந்த விமர்சனங்கள் செய்தல், சில நிமிட அவதானிப்பில் முழுத் தீர்ப்பளித்தல், ஆசிரியரின் தனிப்பட்ட மற்றும் வகுப்பறைச் சூழல்களை புறக்கணித்தல், அச்சம் மற்றும் பதட்டம் உருவாக்கும் அணுகுமுறைகள், மற்ற ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு தரக்குறைவாகப் பேசுதல், பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை வெளிப்படுத்துதல், பாடக்குறிப்புகளை அலட்சியமாக கையாளுதல், “நான் கழுத்துப்பட்டி அணிந்த சர்வதிகாரம் நிறைந்த அதிகாரி” என்ற மனநிலையுடன் அணுகுதல், ஆசிரியரின் விளக்கங்களை கேட்காமல் முடிவெடுத்தல், மேற்பார்வையை தண்டனையாக மாற்றுதல்.

மேற்பார்வைக்கு செல்லும் ஒவ்வொரு கல்வி அதிகாரியும் தமக்குள் ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டும்

நான் இன்று ஒரு ஆசிரியரின் மனஉறுதியை உயர்த்திவிட்டுச் செல்கிறேனா?
அல்லது அதை உடைத்துவிட்டுச் செல்கிறேனா?” ஏனெனில்,

மரியாதை பெறும் ஆசிரியரே
மரியாதையுள்ள தலைமுறையை உருவாக்க முடியும்.

(Mohamed Safeer (SLTES) அவர்களினது கட்டுரையில் சில மாற்றங்கள் செய்து எமது செய்தியாளர் அனுப்பிய பிரதி ஆக்கம்)