Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அட்டாளைச்சேனை முதல் சம்மாந்துறை வரையான ப.நோ.கூ. சங்க காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்க நடவடிக்கை

Posted on May 21, 2026 by Admin | 192 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (20) பாராளுமன்ற கட்டிடத்தில் அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்றபோது இப்பணிப்புரை வழங்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த பரிந்துரையில் குறித்த கூட்டுறவு சங்கங்களின் காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்கப்படுமானால் கூட்டுறவு சங்கங்களின் வருமானம் அதிகரிப்பதோடு விவசாயிகள் தங்களது நெல்லை உள்ளூரிலேயே சந்தைப்படுத்தும் வசதியும் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் தற்போது டீசல் நிரப்பு சேவை மட்டுமே இடம்பெறும் நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு பெட்ரோல் நிரப்பு வசதியும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு அமைச்சர் வசந்த சமரசிங்க அமைச்சின் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.


அதற்கு பதிலளித்த அதிகாரிகள்…..

அம்பாறை மாவட்டத்தில் குறித்த கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளில் நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியசாலைகள் அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் ஆனால் நிதி பற்றாக்குறை நிலவுவதாக கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் அறிக்கையிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை….

கிழக்கு மாகாணம் 30 ஆண்டுகால யுத்த சூழ்நிலையால் கூட்டுறவு துறையில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். எனவே மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மூலம் கிழக்கு மாகாண கூட்டுறவு துறையை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வசந்த சமரசிங்கிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காணிகளில் நெல் களஞ்சியசாலைகள் அமைத்தல் மற்றும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் பொருத்துதல் தொடர்பான திட்ட முன்மொழிவுகளை கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஊடாக அமைச்சுக்கு சமர்ப்பிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

மேலும் அட்டாளைச்சேனை மற்றும் நிந்தவூர் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பான திட்ட அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.