Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

நிசாம் காரியப்பர் எம்பியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு ஜனாதிபதி அங்கீகாரம்

Posted on May 23, 2026 by Admin | 218 Views

(கல்முனை செய்தியாளர்)

அம்பாறை மாவட்டத்தின் சிறப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (22) ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் முன்வைத்த பல முக்கிய பிரேரணைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று அவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கடல் அரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது குறித்து ஜனாதிபதி சிறப்பு கவனம் செலுத்தினார். கடலோரப் பகுதிகளை பாதுகாப்பதோடு சுற்றுலாத்துறையையும் மேம்படுத்தும் வகையில் விரைவான மற்றும் நடைமுறைசார்ந்த திட்டமொன்றை தயாரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். மேலும் கடல் தடுப்பு சுவர் அமைப்பது மட்டும் கடலரிப்பைத் தடுக்கக்கூடிய நிலையான தீர்வாக அமையாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனுடன் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தற்போது நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரச மற்றும் பொது நிறுவனங்களை ஒருங்கிணைத்து ஒரே வளாகத்தில் அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அதேபோல் கல்முனை மாநகர சபைக்கும் கல்முனை பிரதேச செயலகத்திற்கும் புதிய கட்டடங்கள் அமைப்பது தொடர்பான பிரேரணையும் ஆராயப்பட்டது.

இந்தத் திட்டங்களுக்கு தேவையான முழுமையான அறிக்கைகள் மற்றும் திட்ட வரைபடங்களை விரைவாக தயாரித்து சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற “From Principles to Policy: Hate Speech (Online/Offline) and Digital Responsibility in ASEAN: Building Peaceful Coexistence” எனும் தலைப்பிலான பிராந்திய பணிமனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பரும் கலந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் நிசாம் காரியப்பர் அவர்களினால் சமர்ப்பிக்கப்படிருந்த பிரேரணைகளுக்கான மேலதிக தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்பியின் பிரதிநிதியாக செயற்பட்டு விரிவாக கலந்துரையாடியதுடன் அவை தொடர்பாக ஜனாதிபதியால் தேவையான பணிப்புரைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.