Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted on May 25, 2026 by Admin | 241 Views

உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுகின்ற நிலையிலும், தரநிலைக்கு மாறான அல்லது போலியாக தயாரிக்கப்பட்ட இலக்கத் தகடுகளை பயன்படுத்தி வாகனங்களை இயக்க வேண்டாம் என காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் கிடைக்கும் வரை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வாகன இலக்கங்களை ‘A4’ அளவிலான தாள்களில் தற்காலிகமாகக் காட்சிப்படுத்தி வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு முரணான முறையில் தெளிவற்ற எழுத்துகள் மற்றும் எண்களுடன் தயாரிக்கப்படும் இலக்கத் தகடுகளைப் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

வழங்கல் மற்றும் விநியோகச் சிக்கல்கள் காரணமாக, உத்தியோகபூர்வ வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் நடவடிக்கைகள் கடந்த 10 மாதங்களாக பாதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது அந்த விநியோகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னதாக உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகள் மீண்டும் விநியோகிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.