(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அம்பாறை மாவட்டத்தின் சம்புக்களப்பு,பெரிய களப்பு, கரைவாகுப்பற்றின் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது மற்றும் விவசாய மேம்பாடு குறித்த விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் அவசரத் தேவைகள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த பல முக்கிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் விளங்கும் நிலையில் அங்குள்ள நீர்ப்பாசனக் குறைபாடுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
“சம்புக்களப்பு, பெரிய களப்பு மற்றும் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்கள் நீண்டகாலமாக நிறைவு செய்யப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. இதன் காரணமாக அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 6,000 மில்லியன் ரூபாய் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன் ஏறத்தாழ 12,500 ஏக்கர் விவசாய நெல் நிலங்கள் நீண்டகாலமாக நீரில் மூழ்கிப் பாழாகியுள்ளன” என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய நெல் உற்பத்தியின் வளர்ச்சியில் அடித்தளமாக விளங்கும் அம்பாறை மாவட்டத்தின் இந்த வடிச்சல் திட்டங்களை உடனடியாகப் புனரமைப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியை உச்சக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும் எனவும் அவர் பிரேரணை மூலம் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வருடமும் பருவமழை காலங்களில் கல் ஓயா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் அதனைச் சூழவுள்ள ஒன்பதுக்கும் மேற்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது குறித்தும் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம்,தமனை, நிந்தவூர் போன்ற பிரதேச மக்கள் வருடாந்தம் எதிர்கொள்ளும் அனர்த்த நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது
பிரேரணைகளை கவனமாகப் பரிசீலித்த ஜனாதிபதி சம்புக்களப்பு பெரிய களப்பு மற்றும் கரைவாகுப்பற்று வடிச்சல் திட்டங்களை முறையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டத்துடன் அணுகும் பொருட்டு அதற்கான சாத்தியவள அறிக்கையினை (Feasibility Report) உடனடியாகத் தயாரிக்குமாறு அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்
இதன் முதற்கட்டப் பணிகளைத் தொய்வின்றித் தொடங்குவதற்குத் தேவையான ஆரம்பகட்ட நிதி ஒதுக்கீடுகளை விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார். இத்திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் கிழக்கு மாகாண விவசாயிகளின் பல தசாப்த காலத் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது