Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
May 31, 2026

பசில் ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்ய கோட்டை நீதவான் அதிரடி உத்தரவு

Posted on May 29, 2026 by Admin | 79 Views

கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச உள்ளிட்ட மூவரைக் கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் ஆகியோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) கட்டளையிட்டுள்ளார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்தே சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.

எனினும் இவர்களைக் கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவர்களது வீடுகளுக்குச் சென்றபோது, சந்தேகநபர்கள் எவரும் அங்கு இருக்கவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு நீதவான் உடனடியாக வெளிநாட்டு பயணத்தடையை விதித்ததுடன், அது குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கை எனக் கூறி, அரச நிதியில் 12,000 டி-சேர்ட்டுகள் (T-shirts) அச்சிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் சின்னமும் அச்சிடப்பட்டு, மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டங்களின் போது விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.