Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் | | பாலமுனை தாருல் ஹஸனாத் வித்தியாலய வடிகான் நிர்மாணத்துக்கு நிதி ஒதுக்கீடு | | அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு |
Oct 15, 2026

திங்கட்கிழமை கூட்டங்களுக்கு தடை – பிரதேச செயலாளர்கள் அதிரடி முடிவு

Posted on June 7, 2026 by Admin | 218 Views

நாளை (08) முதல் பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ, நேரடி அல்லது இணையவழி கூட்டங்களிலும் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அதிரடித் தீர்மானம் எடுத்துள்ளது.

திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் திடீரென ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்கள் காரணமாக பிரதேச செயலகங்களின் அன்றாட நிர்வாகப் பணிகளும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் மக்கள் திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகங்களுக்கு வருகை தரும் போது உயர் அதிகாரிகள் கூட்டங்களில் மூழ்கியிருப்பதால் மக்களுக்கு உரிய சேவைகளை வழங்குவதில் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன.

27/2023 ஆம் இலக்க அரச நிர்வாக சுற்றறிக்கையின்படி, பொதுமக்கள் தினமாக அறிவிக்கப்பட்ட நாளில் அதிகாரிகள் அலுவலகங்களில் இருந்து மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கையாள வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களும் நடத்தப்படக் கூடாது என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையின் விதிகளைப் பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படும் அலைச்சல்களையும் இடையூறுகளையும் தவிர்க்கும் நோக்கிலும், திங்கட்கிழமைகளில் நடைபெறும் அனைத்துக் கூட்டங்களையும் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.