ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 600,000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குணவர்தன பணியாற்றிய காலத்தில் அந்த நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் முறைகேடுகள் செய்து அரசாங்கத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் நீண்ட விசாரணைக்கு பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹாயில் முன்னிலையில் இன்று இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. இதன்போது, முன்னாள் பிரதி அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவர் குற்றவாளி என நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரதிவாதிக்கான தண்டனை விபரங்களை அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன், 600,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.