Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

தமக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன – உதுமாலெப்பை எம்பி குற்றச்சாட்டு

Posted on June 19, 2026 by Admin | 176 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மரணமடைந்து வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டவர்களின் முழுமையான பெயர் விபரங்களை பிரதேச செயலக ரீதியாகத் திரட்டி பகிரங்கப்படுத்துமாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபேயரத்ன தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை இந்த முக்கியமான முன்மொழிவைச் சமர்ப்பித்தார்.

முன்னதாக கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வழங்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சரிடம் வாய்மூல விடைக்கான கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். எனினும் அதற்கு சுகாதார அமைச்சிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையினால் இது குறித்த முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு சுகாதார அமைச்சின் செயலாளரால் எழுத்து மூலம் வழங்கப்பட்ட பதிலில், கொவிட்-19 தொற்றால் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் சுகாதார அமைச்சிடம் இல்லை எனவும் அந்த விபரங்களை பதிவாளர் நாயகம் திணைக்களத்திடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொது நிருவாக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை உதுமாலெப்பை எம்.பி மீண்டும் கொண்டுவந்தார். பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வமான அறிக்கையின்படி, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளியியல் முறையைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டில் கொவிட்-19 காரணமாகப் பதிவான மரணங்களின் எண்ணிக்கை, மாவட்டம் மற்றும் பாலின வாரியாக மட்டுமே குறியீட்டுத் தரவுகளாகப் பேணப்பட்டு வருகின்றன. ஆனால், பாதிக்கப்பட்ட தனிநபர்களின் பெயர் விபரங்கள் அதில் உள்ளடக்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்து கூட்டத்தில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, கடந்த கொவிட்-19 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாக எரித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில், கொவிட்-19 காலத்தில் இறந்து எரிக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விபரங்களை அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளூடாகப் பெற்று வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளரும் பதிவாளர் நாயகமும், கொவிட்-19 தொற்றினால் தகனம் செய்யப்பட்டவர்களின் விபரங்களை பிரதேச செயலக மட்டத்தில் தனித்தனியாகத் திரட்டுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனச் சுட்டிக்காட்டினர்.

அதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை, கால தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நீதிக்காக கொவிட்-19 காலப்பகுதியில் மரணித்து தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விபரங்களை பொது நிருவாக அமைச்சு கட்டாயம் திரட்டி வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.