Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்

Posted on June 21, 2026 by Admin | 245 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் வெற்றிடத்திற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-1 (SLES-1) அதிகாரி ஒருவரை நியமிப்பதற்காக அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கான பாடசாலைகள் பட்டியலில் இக்கல்லூரி உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல் தெரிவித்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே மேலதிக செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை,

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் நீண்டகாலமாக இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-1 அதிபர் மற்றும் பிரதி அதிபர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதனால் பாடசாலையில் கல்வி பயிலும் 2775 மாணவர்களும், 142 ஆசிரியர்களும் நிர்வாக ரீதியாகவும், கல்விச் செயற்பாடுகளிலும் பாரிய இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், இவ் வெற்றிடங்களை அவசரமாக நிரப்புவதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

அதற்கு விளக்கமளித்த கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கமல், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி என்பது இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரி ஒருவரால் நிர்வகிக்கப்பட வேண்டிய நிறுவனம் என்பதை ஏற்றுக்கொண்டார். கடந்த 2025 நவம்பர் 02, டிசம்பர் 05 மற்றும் 2026 ஜனவரி 03 ஆகிய திகதிகளில் தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் தெரிவு நேர்முகத் தேர்வுகள் நடைபெற்ற போதிலும், இப்பாடசாலைக்கு அதிபர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கான வெற்றிடப் பட்டியலில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மீண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும், அதுவரை நிர்வாகக் கடமைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அதிபர் சேவை தரம்-1 ஐச் சேர்ந்த ஏ.ஆர்.எம். உவைஸ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அதிபர் சேவை தரம்-1 ஐச் சேர்ந்த திருமதி எஸ்.எஸ்.எம். மசூதுலெப்பை இக்கல்லூரியின் பிரதி அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் விளக்கமளித்தார்.