(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
கிழக்கு மாகாண கல்வி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சாதனையை அக்கரைப்பற்றுக் கல்வி வலயம் இம்முறை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
தற்போது வெளியான 2025(2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலேயே முதலிடத்தைப் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலயம் பிரம்மாண்டமான வெற்றியைச் நிலைநாட்டியுள்ளது.
இந்த இமாலய வெற்றி என்பது தற்செயலாக நிகழ்ந்ததொன்றல்ல. திட்டமிடப்பட்ட உழைப்பு, அர்ப்பணிப்பு, கூட்டுமுயற்சி ஆகியவற்றிற்கு கிடைத்த உன்னதமான அங்கீகாரமாகும். இந்த மகுடத்தின் பின்னணியில் கடந்த மாதம் ஓய்வுபெற்றுச் சென்ற முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. எம். ரஹ்மதுல்லாஹ் அவர்களின் தொலைநோக்குடனான வழிகாட்டல்களும், இரும்புக் கரங்களுடனான நிர்வாகத் திறனும் மிக முக்கிய அடித்தளமாக அமைந்திருந்தன.
இவ்வருடம் இடமாற்றம் பெற்றுச் சென்ற கல்வி அபிவிருத்திப் பிரிவின் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எம். சித்தி பாத்திமா அவர்களின் காத்திரமான கல்விசார் நகர்வுகளும், ஏனைய முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்வி பதிப்பாளர்களது இடையறாத கண்காணிப்புகளும் இந்த வெற்றிக்கான விதைகளை ஆழமாக ஊன்றியிருந்தன.
அவர்களின் அந்தத் தூரநோக்குச் சிந்தனைகளைத் தொய்வின்றி முன்னோக்கி எடுத்துச் சென்று இந்த வெற்றிக் கனியைத் தன்வசமாக்கி அதன் களிப்பை தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் வை. அறபாத் முகைதீன் அவர்களின் தலைமையில் முழு அக்கரைப்பற்று கல்வி வலயமும் சுவைக்கிறது. அவரது தலைமைத்துவத்தின் கீழ் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பெளஸ் மற்றும் ஏனைய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஜி.பஸ்மில், ஏ.எம்.ஹஸீன், ஏ.எல்.ஏ.மஜீத், கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் ஒருமித்த இலக்குடன் இராப்பகலாக உழைத்திருந்தனர்.
வலயக் கல்வி அலுவலகத்தின் முறையான செயற்திட்டங்கள், மாதிரிப் பரீட்சைகள், பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான விசேட வழிகாட்டல்களை வழங்கியமை போன்ற வியூகங்கள் இந்த வெற்றியை இன்னும் எளிதாக்கின.
களத்தில் நின்று போராடிய தளபதிகளாக அக்கரைப்பற்று வலயத்தின் பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் ஆற்றிய பணி அளப்பரியதாகும். வகுப்பறைகளைக் கடந்தும், மேலதிக வகுப்புகள் மற்றும் இரவு நேரக் கற்றல் செயற்பாடுகள் மூலம் மாணவர்களின் திறன்களைச் செப்பனிட்ட அவர்களின் தியாகம் போற்றத்தக்கது. பிள்ளைகளின் கல்விக்காகத் தங்களது பொருளாதார, சமூகச் சிரமங்களை மறந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய பெற்றோர்களின் அர்ப்பணிப்பும், அனைத்திற்கும் மேலாகத் தங்களின் ஆசிரியர்களது வழிகாட்டல்களை ஏற்று அயராத உழைப்பின் மூலம் சாதனை படைத்த மாணவச் செல்வங்களின் விடாமுயற்சியும் இந்த வரலாற்றுப் பெருவெற்றிக்கு மகுடம் சூட்டியுள்ளன.
கிழக்கு மாகாணத்திற்கே முன்மாதிரியாகத் திகழும் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தின் இந்த வியக்கத்தக்க சாதனைக்காக உழைத்த முன்னாள் , இந்நாள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பரீட்சையில் தோற்றி வலயம் போற்றத்தக்க வகையில் சாதித்துக் காட்டியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்!