Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அதிகாரத் திமிரால் ஆசிரியர்களை அடிமையாக்கத் துடிக்கும் கல்வி அதிகாரி: அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அரங்கேறும் அவலம்!

Posted on June 22, 2026 by Admin | 1499 Views

ஒரு சமூகத்தின் அறிவுக்கண்ணைத் திறக்கும் உன்னதமான பணியைச் செய்பவர்கள் ஆசிரியர்கள். ஆனால் அவர்களைத் தன் அதிகாரப் பலத்தால் ஒடுக்க நினைப்பதும், மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவதும் ஒட்டுமொத்தக் கல்விச் சமூகத்திற்கும் இழைக்கப்படும் அநீதியாகும். இத்தகையதொரு கண்டிக்கத்தக்கச் செயல் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஒரு SLEAS அதிகாரியினால் அரங்கேறி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் வெளியான 2025(2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயமானது கிழக்கு மாகாணத்திலேயே முதனிலை பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்கு பின்னணியிலிருந்தது இதற்கு முன்னர் குறித்த பாடத்திற்கு பொறுப்பாக இருந்த உதவிக் கல்விப் பணிப்பாளரினதும்,ஏனைய பாடங்களை வழிநடத்தி வரும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களினதும் நடுநிலையான போக்கும், மனிதாபிமானம் மிக்க அர்ப்பணிப்புமே ஆகும். அவர்களின் தூரநோக்கு சிந்தனையால் ஒட்டுமொத்த மாகாணமே வியந்து பார்க்கும் உயரத்தைத் தொட்டுள்ள அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குள் தற்போது ஒரு புதிய நச்சுக்கிருமி புகுந்து ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியையும் சீரழிக்கத் தொடங்கியிருப்பதுதான் பெரும் வேதனைக்குரிய விஷயமாகும்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் தற்போது குறித்த பாடத்திற்கான உதவி கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) அதிகாரி ஒருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள உயரிய பதவியையும், அதிகார ஆசனத்தையும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவர்களை அடிமைப்படுத்துவதற்கும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதற்குமே ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறார்.

“இந்த அதிகார ஆசனம்தான் என்னை இப்படிப் பேச வைக்கிறது” என்று பகிரங்கமாகக் ஆசிரியர்களின் முன் முழங்கிக்கொண்டு, தன் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களைத் தண்டிக்கும் நோக்கோடும், ஏளனப்படுத்தும் நோக்கோடுமே அணுகி வருகிறார். இவ்வாறு அவர் அடாவடியாக ஆசிரியர்களிடம் பேசிய பல ஒளிப்பதிவுக் காட்சிகள் , ஒலிப்பதிவுகளும் பல ஆசிரியர்களிடம் ஆதாரமாக உள்ளன.

ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வித் துறையின் முதுகெலும்புகள். அவர்களைத் தனது அதிகாரத்தின் கீழ் இயங்கும் அடிமைகள் போல நடத்த முற்படுவது அவரது குறுகிய மனப்பான்மையையும், அதிகார வெறியையுமே காட்டுகிறது.

இங்கு ஒரு வேடிக்கையான ,வெட்கக்கேடான ஒரு வரலாற்று உண்மையை இச்சமூகத்திற்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து கொண்டு தான் ஏதோ வானத்தில் இருந்து குதித்த உத்தமனைப் போலவும், தனது கை மிகவும் சுத்தமானது போலவும் பாசாங்கு செய்யும் இந்த அதிகாரியின் கடந்த காலப் பக்கம் மிகவும் கறைபடிந்தது. இவர் இந்த SLEAS பதவிக்கு வருவதற்கு முன்னர் ஒரு சாதாரண ஆசிரியராகக் கடமையாற்றிய காலங்களில் இவரது கற்பித்தல் செயல்பாடுகளின் லட்சணம் என்ன என்பது ஒட்டுமொத்த வலயத்திலும் உள்ள ஆசிரியர்களுக்கு நன்றாக தெரியும். இவரது கற்பித்தல் முறை குறித்து அன்று அடுக்கடுக்கான விமர்சனங்கள் எழுந்தன. வலய மட்ட அதிகாரிகள் இவருடைய வகுப்பறைகளை மேற்பார்வை செய்ய வந்தபோதெல்லாம் இவர் காட்டிய குழறுபடிகளும், தப்பும் தவறுமான செயல்பாடுகளும் ஊரறிந்த ரகசியம். அதுமட்டுமன்றி மாணவர்களுடனான உறவுகளில் இவர் காட்டிய கண்ணாமூச்சி விளையாட்டுகளும், பல ஒழுங்கீனமான செயல்பாடுகளும் இவருடைய கடந்த காலத் தராதரத்தைக் கிழித்துக் காட்டுகின்றன.

அன்று அத்தனை ஒழுங்கீனங்களையும், குளறுபடிகளையும் செய்துவிட்டு இன்று ஏதோ மகாத்மா காந்தியின் மறுஅவதாரம் போல நினைத்துக் கொண்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் அர்ப்பணிப்பான ஆசிரியர்களை அடக்க முற்படுவதையும், பழிவாங்கத் துடிப்பதையும் எந்தவொரு இயல்பான மனிதனாலும், பகுத்தறிவுள்ள சமூகத்தினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தனது பழைய தகுதியீனங்களை மறைப்பதற்காகவே இன்று அதிகார போதையைத் தலைக்கேற்றிக் கொண்டு ஆடுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

உதவி கல்விப் பணிப்பாளர் என்ற பதவி குறிப்பிட்ட பாடத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஊக்குவிப்பதற்கும் வழங்கப்பட்டதே தவிர தனிப்பட்ட அதிகார ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கல்ல என்பதை இந்த அதிகாரி முற்றிலும் மறந்துவிட்டார். ஆசிரியர்களிடம் காணப்படும் குறைபாடுகளை முறையாக அணுகி நிபர்த்தி செய்வதனை விட்டுவிட்டு தான்தோன்றித்தனமாக செயற்பட்டுவருகிறார். இவரது இந்த அடாவடித்தனத்தினாலும் அதிகாரப் போக்கினாலும் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்றுத் திகழும் அக்கரைப்பற்று கல்வி வலயம் எதிர்காலத்தில் குறித்த பாடத்தில் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு அக்கரைப்பற்று கல்வி வலயம் வீழுமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் இவ் SLEAS அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் இந்த உன்னதமான கல்வி வளர்ச்சியை திட்டமிட்டுச் சீரழிக்கும் நோக்கோடுதான் இந்த அதிகாரி செயல்படுகிறாரோ என்ற பலத்த அச்சம் தற்போது கல்விச் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் அடுத்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் இவருடைய இந்த அராஜகப் போக்கு நீடிக்குமானால் மாணவர்கள் மத்தியில் குறித்த பாடத்தின் பெறுபேறுகள் அதளபாதாளத்திற்குச் செல்வது நிச்சயம்.

வலயத்தின் வெற்றியைத் தன் சொந்தப் பேராசையால் குழிதோண்டிப் புதைக்கத் துடிக்கும் இந்த அதிகாரியின் செயல்பாடு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஒரு ஆபத்தான சூதாட்டமாகும்.

இதில் மிகவும் கொடுமை என்னவென்றால் குறித்த பாடம் சார்ந்த ஆசிரியர்களின் கௌரவம் இன்று வகுப்பறைகளில் மாணவர்கள் முன்னிலையிலேயே சிதைக்கப்பட்டு வருகிறது. இந்த SLEAS அதிகாரி, மாணவர்கள் பார்க்கும் போதே ஆசிரியர்களை மிக மோசமாகக் கடுமையாக விமர்சிப்பதும்,அவமானப்படுத்துவதுமாகத் தன் அநாகரிகப் போக்கை அரங்கேற்றி வருகிறார்.

தன் கண் முன்னே தன் ஆசிரியரை ஒரு அதிகாரி மதிக்காமல் நடத்தும் போது அக்காட்சி பிஞ்சு மாணவர்களின் மனநிலையிலும் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஆசிரியர்கள் மீதான மதிப்பையும் திட்டமிட்டுச் சிதைக்கிறது. தொடர்ச்சியான இத்தகைய மன அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆசிரியர்களால் தங்களின் கடமைகளைச் சுதந்திரமாகவும், அர்ப்பணிப்போடும் செய்ய முடியாத ஒரு இக்கட்டான சூழல் அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் குறித்த பாடத்துறை சார்ந்த ஆசிரியர் குழாத்தினருக்கு உருவாகியுள்ளது.

பதவிகளும், அதிகார நாற்காலிகளும் இன்று வரும், நாளை போகும். அவை எதுவுமே நிரந்தரமானவை அல்ல என்பதை இந்த அதிகாரி புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரத் திமிரால் ஆசிரியர்களை ஆட்டிப்படைக்க நினைக்கும் இவருக்கு இச்சமூகமும், உயர் கல்வி அதிகாரிகளும் தகுந்த பாடம் புகட்ட வேண்டிய தருணம் தற்போது கனிந்துள்ளது.

சட்டத்திற்கும் தர்மத்திற்கும் அப்பாற்பட்டு ஆட்டம் போடும் இந்த SLEAS அதிகாரியின் இவ்வாறான அடக்குமுறையான செயல்பாடுகளை வன்மையாகக் கண்டித்து குறித்த பாடத்துறை சார்ந்த அக்கறைப்பற்று கல்வி வலயத்தினுடைய ஆசிரியர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.

இவருடைய அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இவருக்கு எதிரான ஆதாரபூர்வமான முறைப்பாடுகளை தயாரித்து கல்வி அமைச்சரும் கௌரவ பிரதமருமான ஹரினி அமரசூரிய , கிழக்கு மாகாண ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர்கள் ,மற்றும் உயர்கல்வி அதிகாரிகள், ஆசிரிய சங்கங்களுக்கும் அவசரமாக அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் குழாம் தற்பொழுது மேற்கொண்டுள்ளனர்.

இனிமேலும் இவருடைய இந்த அராஜகப் போக்கு நீடித்தால் அது அக்கரைப்பற்று வலயத்தின் கல்வி வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதால் ஆசிரியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் ஆரோக்கியமான கற்றல் சூழலை உறுதிப்படுத்தவும், குறித்த அதிகாரியின் அடாவடித்தனங்களுக்கு எதிராக உரிய உயர் அதிகாரிகள் உடனடியாக தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த சமூகத்தினதும் தார்மீக எதிர்பார்ப்பாகும்.