Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

முஸ்லிம் கிராமங்களின் அபிவிருத்தியும் தேசிய மீலாதுந் நபி விழாவும் தொடர்பில் புத்தசாசன அமைச்சரிடம் உதுமாலெப்பை எம்பி கேள்வி

Posted on June 23, 2026 by Admin | 421 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இன்று(23) நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது தேசிய மீலாதுந் நபி விழா ஏற்பாடுகள் மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ ஹினிதும சுனில் செனெவியிடம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களால் மிக முக்கியமான வினாக்கள் எழுப்பப்படவுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான காலஞ்சென்ற எம்.எச். முஹம்மது அவர்களின் காலப்பகுதியில் தேசிய மீலாதுந் நபி விழா மாவட்ட மட்டத்தில் கொண்டாடும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து காலஞ்சென்ற ஏ.எச்.எம். அஸ்வர் அமைச்சராக இருந்த காலத்தில் இவ்விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டமை குறித்து அமைச்சர் அறிவாரா என இதன்போது கேள்வி எழுப்பப்படவுள்ளது.

மேலும் இந்த விழாக்கள் மாவட்ட மட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதன் மூலம், பின்தங்கிய நிலையில் காணப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் புனரமைக்கப்பட்டதோடு முஸ்லிம் கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டமை குறித்து அமைச்சர் அறிவாரா? எனும் வினாவும் வினவப்படவுள்ளது.

நடப்பு 2026 ஆம் ஆண்டில் தேசிய மீலாதுந் நபி விழாவை நடத்துவதற்கு இன்றளவில் தீர்மானிக்கப்பட்டுள்ள மாவட்டம் மற்றும் பிரதேசம் யாது ? என்பது பற்றியும் இவ்விழாவினை அலரி மாளிகையில் நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கு ஏதேனும் அறிவித்தல்களை வழங்கியுள்ளதா என்பது குறித்தும் இன்றைய பாராளுமன்றக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்துமாறு கோரப்படவுள்ளது.

ஒருவேளை அவ்வாறு அறிவிக்கப்படவில்லை எனின் அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றிய விளக்கத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரிடம் கோரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.