(அட்டாளைச்சேனை செய்தியாளர்- ஹனீன்)
ஹாஅட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை பொது விளையாட்டு மைதானங்களில் இரவு நேர மின்னொளி சுற்றுப் போட்டிகள் உட்பட அனைத்து விதமான விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்விச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸினால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியில் மிக முக்கிய பரீட்சையான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளதால் இக்காலப்பகுதியில் மாணவர்கள் எவ்வித மனச்சிதறல்களும், சத்தங்களும் இன்றி அமைதியான முறையில் தங்களது இறுதி தயாரிப்புகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அண்மைக்காலமாக பொது மைதானங்களில் நள்ளிரவு வரை நீடிக்கும் மின்னொளிப் போட்டிகள், சத்தங்கள் மற்றும் ஒலிபெருக்கிப் பயன்பாடு காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகப் முறைப்பாடுகள் எழுந்திருந்தன.
இதனைக் கருத்திற் கொண்டே மாணவர்களின் எதிர்கால நலனுக்கு முன்னுரிமை வழங்கி இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தெரிவித்துள்ளார். ஒலிபெருக்கிகளின் அதிரவைக்கும் சத்தம் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும் என அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கல்வி வீதத்தை உயர்த்துவதற்கும், மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கும் ஏதுவாக எடுக்கப்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க தீர்மானத்திற்கு பிராந்தியத்திலுள்ள அனைத்து விளையாட்டுக்கழகங்களும், பொதுமக்களும், இளைஞர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.