Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அறுகம்பேயில் 500 வீரர்கள் பங்குகொள்ளும் அரை மரதன் ஓட்டப்போட்டி

Posted on June 30, 2026 by Admin | 101 Views

(ரியாஸ் ஆதம்)

அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி அந்த போரத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 09ஆம் திகதி அறுகம்பேவில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இப்போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் அறுகம்பே றாம்ஸ் கபே உல்லாச விடுதியில் நேற்றைய முன்தினம்(28) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவரும் இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் அறுகம்பே, அழகிய இயற்கை வளங்களைக் கொண்டுள்ளதுடன், அலைச்சறுக்கு (Surfing) விளையாட்டிற்குப் பெயர் பெற்றது. இத்தகைய சிறப்புமிக்க இடத்திற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்தியில் இன்னும் ஒரு சாராரை குறிப்பாக மரதன் போட்டிகளில் ஆர்வமிக்கவர்களையும் வர வைப்பதற்காகவே கடந்த 7 வருடங்களாக மரதன் போட்டிகளை நடாத்தி வருகின்றோம்.

உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அறுகம்பேயின், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு நடாத்தும் இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்காக கனிசமானோர் அறுகம்பே பிரதேசத்துக்கு வந்து சென்றுள்ளனர். பலர் ஒவ்வொரு வருடமும் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வருகின்றனர். Arugam Bay Half Marathon வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.

அந்தவகையில், இந்த வருடத்துக்கான அரை மரதன் ஓட்ட போட்டியினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி நடத்துவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர், 5கிலோமீற்றர் என 3பிரிவுகளாக இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் 354 வீரர்கள் கலந்துகொண்டனர். அதில் 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 வெளிநாட்டவர்கள் பங்கேற்றிருந்தமை விசேட அம்சமாகும். இம்முறை இடம்பெறவுள்ள போட்டியில் 500 வீரர்களைப் பங்கேற்க வைப்பதே எமது இலக்காகும். இதில் பங்குபற்ற விரும்புவோர் பின்வரும் www.arugambayhalfmarathon.com இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை செய்துகொள்ள முடியும் என்றார்.

போரத்தின் செயலாளர் எம்.எச்.சுபஹான் கருத்து தெரிவிக்கையில்,

ஒன்றாய் ஓடுவோம் ஒன்றாய் எழுவோம் எனும் தொனிப்பொருளில் இம்முறை அறுகம்பே அரை மரதன் போட்டி இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு குறித்த தூரத்தை ஓடி முதல் மூன்று இடங்களை பெறும் வீரர்களுக்கு பெறுமதியான பணப்பரிசு மற்றும் ‘Arugam Bay Half Marathon 2026’ நினைவுப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் குறித்த தூரத்தை ஓடி முடிக்கும் ஏனைய வீரர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த மரதன் நிகழ்வு, அறுகம்பேயின் பொருளாதார மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்றார்.

போரத்தின் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.ஜமாஹிம் கருத்துத் தெரிவிக்கையில்,

அறுகம்பே மரதனில் பங்குபற்றுவதற்காக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கனிசமான வெளிநாட்டு வீரர்கள் வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக எமது நாட்டு வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். வெளிநாட்டு வீரர்களுடன் ஓடுவதற்கான வாய்ப்பை இலங்கை வீரர்களுக்கும் நாம் ஏற்படுத்தி தந்துள்ளோம். இந்த அரிய சந்தர்ப்பத்தை எமது வீரர்களும் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, போரத்தின் பொருளாளர் ஏ.ஜி.அமீர் அலி கருத்துத் தெரிவிக்கையில்,

எமது போரமானது அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பூரன ஒத்துழைப்புக்களுடன் பல்வேறு அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் குறித்த அரை மரதன் போட்டியினை நடாத்தி வருகிறது. இந்த நிகழ்வின் ஊடாக கிடைக்கும் நிதியினை பொத்துவில் மற்றும் அறுகம்பே பிரதேசத்தில் உள்ள மூவின மக்களும் நன்மையடையும் வகையில் பல்வேறு பணிகளை செய்து வருகின்றோம். குறிப்பாக கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காவே அதிகமான நிதிகள் செலவிடப்படுகின்றன என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் உப தலைவர் எம்.எஸ்.ஏ.நாசர், எம்.எம்.பைசர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.