Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் மரநடுகை நிகழ்வு

Posted on July 1, 2026 by Admin | 7385 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஹபீஸ்)

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கோடும் தேசிய உணவு உற்பத்தியை மேம்படுத்தும் இலக்கோடும் அம்பாறை மாவட்டத்தில் விசேட மரநடுகை வேலைத்திட்டமொன்று இன்று (01) மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இவ்விழுமியமிக்க நிகழ்வு, அட்டாளைச்சேனை அக் / அல் முனீரா பெண்கள் உயர் பாடசாலையின் ஆரம்ப பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நாற்று நடும் விழாவில் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் ஆகியோர் முதன்மை அதிதிகளாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

பூகோள வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் கட்டுப்படுத்துவதில் மரங்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். இதனை உணர்த்தும் வகையில் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுற்றாடல் பாதுகாப்பின் அவசியம் குறித்து இதன்போது விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வெறும் மரநடுகையோடு நின்றுவிடாமல் வளரும் இளம் தலைமுறையினரிடம் இயற்கை மீதான நேசிப்பை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்நிகழ்வில் பிரதேச சபை செயலாளர் ஆர். எம். நழீல், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பொது இடங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலும் பசுமைச் சூழலை உருவாக்கும் நோக்கில் பயன்தரு மரக்கன்றுகள் நடும் பணிகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.