Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

மர்ஹும் SSP மஜீத் அவர்களின் மறைவு சமூகத்திற்கு பேரிழப்பு – எம்.எஸ்.உதுமாலெப்பை எம்பி ஆழ்ந்த அனுதாபம்

Posted on July 1, 2026 by Admin | 112 Views

ஒளி இழந்து போன காவல் தீபமாக விளங்கிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) மஜீத் அவர்களின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

சிலர் பதவிகளால் அலங்காரம் பெறுவர், ஆனால் ஒரு சிலரால் பதவிகள் அழகு பெறும் என்பதற்கு இணங்க, பதவியோடு சமூகத்தையும் நிலைநிறுத்திய மர்ஹும் SSP மஜீத் அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார்.

கிழக்கிலங்கையின் பொத்துவில் மண்ணில் பிறந்த அவர் தனது இளமைக் காலம் முதற்கொண்டே சமூகப் பணிகளிலும் விளையாட்டிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் ஆவார். கொழும்பு சாஹிரா கல்லூரியில் உயர் கல்வி கற்றபோது ரக்பி விளையாட்டு வீரராக இனம் காணப்பட்டு, பின்நாட்களில் தேசிய ரக்பி அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்டமை அவரது திறமைக்கும் ஆளுமைக்கும் சான்றாகும்.

உதவி பொலிஸ் உத்தியோகத்தராகத் தனது சேவையை ஆரம்பித்த அவர், பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக (SSP) தனது நிலையை உயர்த்திக் கொண்டார்.

1980களின் இறுதியில் ஏற்பட்ட போர்ச்சூழலின் போது முழு கிழக்கு மாகாணத்திற்கும் பாதுகாப்பு அரணாக இருந்து செயற்பட்ட SSP மஜீத் அவர்களை முஸ்லிம் சமூகம் இலகுவில் மறந்து விட முடியாது என்றும், அக்காலப்பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத மோகத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்களைக் காப்பாற்றி அரச சேவை உத்தியோகத்தர்களாக மாற்றி அவர்களின் வாழ்வுக்கு அவர் ஒளியூட்டினார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஆரம்பகாலம் முதல் சமூக சேவைகளில் தன்னை இணைத்துக் கொண்ட SSP மஜீத் அவர்கள் 1996ஆம் ஆண்டு முதல் நேரடி அரசியலில் ஈடுபட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் மாகாண சபை உறுப்பினரானார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பொத்துவில் பிரதேசத்திற்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளில் SSP மஜீத் அவர்களும் தன்னோடு இணைந்து செயற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பொத்துவில் பிரதேச காணி பிரச்சினைகள், பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயம், வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முதலான பல்வேறு விடயங்களுக்காக அவர் தனது இறுதிக் காலம் வரை குரல் கொடுத்து வந்துள்ளார்.

பின்நாட்களில் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட SSP மஜீத் அவர்கள், 2014ஆம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து அரங்கேற்றப்பட்ட தர்கா நகர் துயர சம்பவத்திற்கு எதிராகச் சமூகத்தின் சார்பாக தைரியமாக குரல் எழுப்பியிருந்தார்.

நேர்மையும் தைரியமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற SSP மஜீத் அவர்களின் இழப்பு, முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு பெரும் பேரிழப்பாகும். சமூகத்தின் மூத்த தலைமைகளில் ஒருவரான அவரது மறைவினால் துயருறும் குடும்ப உறவினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் ஆறுதலை வழங்க வேண்டும் எனவும், அன்னாரது மண்ணறை வாழ்வு வெளிச்சமாகவும் மறுமை வாழ்வு இனிதாகவும் அமைய பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.