Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் திறக்கப்பட்ட அதிநவீன மருத்துவ பீடம்

Posted on July 4, 2026 by Admin | 199 Views

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகம் பிரதமர் தலைமையில் மாணவர் பயன்பாட்டிற்கு இன்று (4) கையளிக்கப்பட்டது. இப்புதிய மருத்துவபீட வளாக நிர்மாணத் திட்டத்திற்காக இலங்கை அரசாங்கம் சுமார் 2,876 மில்லியன் ரூபாய் நிதியைச் செலவிட்டுள்ளதுடன், சவூதி அரேபிய அரசு சுமார் 15 பில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியிருக்கின்றது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடத் திறப்பு விழாவானது சவூதி அரேபியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான, நீடித்த கூட்டாண்மையைப் பிரதிபலிக்கும் ஒரு முக்கிய மைல்கல் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் உள்ள பரஸ்பர அர்ப்பணிப்புக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நட்பு நாடுகளில் நிலையான அபிவிருத்தியை முன்னெடுத்து வரும் இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத் ஆகியோரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்கு தனது ஆழ்ந்த நன்றியைப் பதிவு செய்துள்ளார்.

இத்திட்டத்திற்கு முழுமையான நிதியுதவி வழங்கி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய சவூதி அபிவிருத்தி நிதியத்திற்கு (SFD) பாராட்டு தெரிவித்துள்ள தூதுவர், இந்த மருத்துவ பீடத்தின் நிறுவல் என்பது இலங்கையின் சுகாதாரத் துறை மற்றும் மனித வள மேம்பாட்டின் எதிர்காலத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு முதலீடு என்றும், உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் சவூதியின் நீண்டகால அர்ப்பணிப்பை இது காட்டுவதாகவும் விளக்கியுள்ளார். இந்த புதிய மருத்துவ பீடம் எதிர்கால மருத்துவ நிபுணர்களை உருவாக்குவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.