Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

வெள்ளத்தால் உடைந்த அட்டப்பளம் பாலம் சீன நிதியுதவியுடன் செப்டம்பரில் புனரமைக்கப்படும்

Posted on July 8, 2026 by Admin | 221 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

கல்முனை–அக்கரைப்பற்று பிரதான வீதியில் கடந்த 2024ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் சேதமடைந்த அட்டப்பளம் பாலத்தின் நிரந்தர நிர்மாணப் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று(07) அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின்போதே இத்தகவல் வெளியிடப்பட்டது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கொழும்பு-ரத்னபுரி–வெல்லாவாய–மட்டக்களப்பு (A5) பிரதான வீதியில் அமைந்துள்ள இந்த பாலம் பெரு வெள்ளத்தினால் சேதமடைந்ததை அடுத்து தற்காலிகப் பாலமொன்று அமைக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நிரந்தரப் பாலத்திற்கான பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம், தேசிய கல்வியியல் கல்லூரி மற்றும் அரச ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பிரதான வீதி இது என்பதால் பாலத்தின் பணிகளை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் அவர் அவசர கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, விடயம் குறித்து விளக்கமளிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

அதற்குப் பதிலளித்த அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன், இந்த அட்டப்பளம் பாலமானது சீன அரசாங்கத்தின் விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், திட்டமிட்டபடி வரும் செப்டம்பர் மாதத்தில் இதன் நேரடி நிர்மாணப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.