கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான குமாரசிங்கம் குணநாதன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.
மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் மிக உயரிய பதவியான பிரதம செயலாளர் பொறுப்பை ஏற்கும் குமாரசிங்கம் குணநாதன் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர (Special Grade) அதிகாரியாவார். இவர் இதற்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி மாகாணத்தின் கல்வித்துறையில் பல காத்திரமான சீர்திருத்தங்களை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தின் முக்கிய பிரதேசங்களான குச்சவெளி, வெருகல் மற்றும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக நீண்டகாலம் பணியாற்றி, அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒரு மக்கள் அதிகாரியாகவும் இவர் விளங்குகிறார்.
மாகாணத்தின் கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் இவருக்கு இருக்கும் பலவருட கால அனுபவமும், பல்லின மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தின் கள யதார்த்தங்கள் குறித்த புரிதலும், மாகாணத்தின் புதிய அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வினைத்திறனுடன் முன்னெடுத்துச் செல்ல பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.