Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம்

Posted on July 15, 2026 by Admin | 223 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்-ஹபீஸ்)

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜனாப் பி.எம்.வை. அறபாத் முகைதீன் அவர்களுக்கான வரவேற்பும் , முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம். ரஹ்மதுல்லாஹ் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் மாபெரும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பைத் தொடர்ச்சியாக வழங்கி வரும் அக்கரைப்பற்று ‘பைத்துல் ஹிக்மா’ (Baithul Hikma) நிறுவனத்தினால் இந்த கௌரவிப்புப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஹனீபா இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பைத்துல் ஹிக்மா ஆளுநர் சபையின் உறுப்பினர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட பிரமுகர்கள், கல்விப் பணிப்பாளர்களின் சிறப்பான சேவைகளை விதந்துரைத்து வாழ்த்துரைகளை வழங்கியதோடு, புதிய மற்றும் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவம் செலுத்தினர்.

விழாவில் உரையாற்றிய முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எம். ரஹ்மதுல்லாஹ், அக்கரைப்பற்றின் கல்விச் செயற்பாடுகளுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனம் வழங்கி வரும் அளப்பரிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார். கடந்த 14 ஆண்டுகளாக இந்நிறுவனம் நிலைத்து நின்று சமூகத்தில் ஒரு பெருவிருட்சமாக வளர்ந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தொடர்ந்தும் நிழல் தந்து வருவதை அவர் மிகுந்த மனநிறைவோடு புகழ்ந்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் பி.எம்.வை. அறபாத் முகைதீன், க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களின் கல்வி அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்காக பைத்துல் ஹிக்மா மேற்கொண்டு வரும் காத்திரமான பணிகளைப் பாராட்டினார். காலத்தின் தேவையறிந்து எதிர்காலத்தில் இந்நிறுவனம் தனது கல்விச் செயற்பாடுகளை மேலும் பல துறைகளுக்கும் விரிவுபடுத்தி, ஒட்டுமொத்த சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

அக்கரைப்பற்று கல்வி வலயம் அண்மைக் காலங்களாக தேசிய ரீதியில் கல்வி அடைவுகளில் முன்னிலை வகித்து வருகின்றமை தொடர்பில் இரு வலயக்கல்விப் பணிப்பாளர்களும் தமது பெருமிதத்தை வெளியிட்டனர். சவால்களுக்கு மத்தியிலும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக அயராது உழைத்த கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அவர்கள் தமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.