Top News
| புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசு தயார் நிலையில் இல்லை | | பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் |
Aug 30, 2026

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள்

Posted on July 16, 2026 by Admin | 110 Views

சர்வதேச கிரிக்கெட் சபையின் வருடாந்த ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடர்களுக்கான போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட ஆடவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரானது 14 அணிகளின் பங்கேற்புடன் மூன்று சுற்றுகளாக, அதாவது முதலாம் சுற்று, இரண்டாம் சுற்று மற்றும் ‘சூப்பர் 7’ சுற்று என நடைபெறவுள்ளது.

இத்தொடருக்குத் தகுதிபெற்ற 14 அணிகளில் கடைசி மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கிடையே ‘சூப்பர் சீரிஸ்’ சுற்றொன்று நடத்தப்பட்டு அதிலிருந்து ஒரு அணி மாத்திரம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறும். இதன் மூலம் இரண்டாம் சுற்றில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 12 ஆகக் குறைக்கப்படும். இந்த 12 அணிகளும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், ஒட்டுமொத்தமாகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் நான்காவது இடத்தில் உள்ள ஒரு அணியும் இணைந்து, மொத்தம் ஏழு அணிகள் ‘சூப்பர் 7’ சுற்றுக்குத் தகுதிபெறும். இச்சுற்றில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவதுடன், அதில் வெற்றியீட்டும் இரு அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

இதேவேளை 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரிலும் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் அணிகள் தலா நான்கு வீதம் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் 10’ சுற்றுக்குத் தகுதிபெறும். இந்த 10 அணிகளும் தலா ஐந்து அணிகள் வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடும். இச்சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் இரண்டு அணிகளும் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதிபெறும். அத்துடன் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘எலிமினேட்டர்’ சுற்றில் மோதுவதுடன், அதில் வெற்றிபெறும் இரண்டு அணிகளே எஞ்சியுள்ள இரண்டு அரையிறுதி இடங்களையும் கைப்பற்றும்.