Top News
| அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கு ரூபா 4,066 மில்லியன் ஒதுக்கீடு | | சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் அனர்த்த கால நாயகன் பாறுக் நாஜி திடீர் இராஜினாமா

Posted on July 21, 2026 by Admin | 160 Views

(பாலமுனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளரும், தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான பாறுக் நாஜி தனது பிரதேச சபை உறுப்பினர் பதவியை உத்தியோகபூர்வமாக நாளை(22) இராஜினாமா செய்யவுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சி அமைத்துள்ளன. இந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் சபையின் தவிசாளர் பதவியானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும், பிரதித் தவிசாளர் பொறுப்பு தேசிய காங்கிரஸுக்கும் வழங்கப்பட்டிருந்தன. இதற்கமைவாகவே தேசிய காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தின் ஊடாகப் பாறுக் நாஜி அவர்கள் பிரதித் தவிசாளராகப் பொறுப்பேற்று திறம்படக் கடமையாற்றி வந்தார்.

பதவி வகித்த காலப்பகுதியில் தனது பிரதேசத்திற்காகவும் மக்களுக்காகவும் அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. குறிப்பாக, எதிர்பாராத அனர்த்த காலங்களில் மக்களின் துயர் துடைப்பதற்காக இரவு பகல் பாராது களத்தில் நின்று அவர் சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது. பதவிகளைத் தாண்டி ஒரு உண்மையான மக்கள் தொண்டனாக அவர் முன்னெடுத்த இந்த அர்ப்பணிப்பான செயற்பாடுகளைப் பிரதேச மக்கள் என்றும் நன்றியோடு நினைவுகூருகின்றனர்.

‘கிராமங்களுக்கு அதிகாரம்’ என்ற தேசிய காங்கிரஸின் உன்னத கொள்கையின் அடிப்படையில் தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் பதவி வகித்து பின்னர் மற்றையவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பதவி விலகுவது கட்சியின் திட்டமாக காணப்படுகிறது. கட்சியின் இந்தக் கொள்கைக்கு மதிப்பளித்தும், தலைமையின் தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டும் தேசிய காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தாமாகவே முன்வந்து இவ்வாறு பதவி விலகி வருவது அரசியல் அரங்கிலும் பொது மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த கூட்டத் தொடர் இன்று(21) சபை மண்டபத்தில் இடம்பெற்ற போது , தனது இறுதி அமர்வில் பிரதித் தவிசாளராக கலந்துகொண்ட பாறுக் நாஜி, தனது பதவிக்காலத்தில் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த சக உறுப்பினர்களுக்கும், தன் மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்த பிரதேச மக்களுக்கும்,தனது கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து விடைபெற்றார்.