(ஒலுவில் செய்தியாளர் – மனாப்)
நீதி அமைச்சருக்கு எதிராக நேற்று (24) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக சில ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளையில் இலத்திரனியல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆரம்பத்தில் சபையின் திரையில் அவர் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாகத் தவறுதலாகக் காண்பிக்கப்பட்டது. இதனை உடனடியாக அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தாமதிக்காது சபையில் எழுந்து நின்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு குறித்து சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
குறித்த விவகாரத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் “நீங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கிறீர்களா? அல்லது எதிர்க்கிறீர்களா?” என சபாநாயகர் நேரடியாக எம்.எஸ். உதுமாலெப்பையிடம் வினவினார்.
இதற்குப் பதிலளித்த எம்.எஸ். உதுமாலெப்பை “நான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்தே வாக்களிக்கிறேன். ஆனால் எனது வாக்கு பதிவு செய்யப்பட்ட இயந்திரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது” என சபையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னரும் சபாநாயகர் மீண்டும் உறுதிப்படுத்திய போது “நான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கிறேன்” என்று பகிரங்கமாகத் தெரிவித்து பிரேரணைக்கு ஆதரவாகவே தனது வாக்கினை அவர் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் இலத்திரனியல் திரையில் தோன்றிய தொழில்நுட்பப் பிழையான பதிவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு உண்மை நிலையைப் புறக்கணித்து சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இது தொடர்பிலான உண்மை நிலைமையைப் பாராளுமன்ற நேரடி ஒளிபரப்புக் காணொளிப் பதிவுகள் மூலம் பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
நேற்றைய இலத்திரனியல் வாக்குப்பதிவின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான உதுமாலெப்பை, மரைக்கார் , திலிப் வெதஆரச்சி, சந்தன சூரியஆரச்சி ஆகியோர்களின் வாக்குப் பதிவு இயந்திரங்களிலும் தடங்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.