Top News
| அட்டாளைச்சேனை நாவலடி வீதியில் மரணப் பொறியாக மாறியுள்ள வடிகான்- கண்டும் காணாமல் இருக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபை | | பார்வையற்றோருக்கான AI கண்ணாடியை உருவாக்கிய அட்டாளைச்சேனை இளைஞனுக்கு அமெரிக்காவில் சர்வதேச அங்கீகாரம் | | பதிவாளர் தரம் II போட்டிப் பரீட்சையில் அட்டாளைச்சேனையை சேர்ந்த பைறூஸ் தெரிவு |
Aug 16, 2026

டெங்கை ஒழிக்க அரசியல் பேதமின்றி ஒன்றிணைய உதுமாலெப்பை எம்பி அழைப்பு

Posted on July 28, 2026 by Admin | 85 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் “டெங்கற்ற கிழக்கு” எனும் தொனிப்பொருளிலான விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டம் அட்டாளைச்சேனை சராஹ் பீச் ரிசோர்ட்டில் (Sarah Beach Resort) நேற்று (27) வெற்றிகரமாக இடம்பெற்றது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டத்தின் இரண்டாவது நிகழ்வு கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான றியா மசூரின் தலைமையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் அண்மைக் காலமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்ற இந்நிலையிலேயே பொதுமக்களை விழிப்படையச் செய்வதற்கும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் நுளம்பு பெருகும் சுற்றாடல்களை அடையாளம் கண்டு அழிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதற்கும் இவ்விசேட வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அட்டாளைச்சேனை அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை கருத்துத் தெரிவிக்கையில்,

“டெங்கு நோயானது இனம், மதம், சமூக அந்தஸ்து அல்லது அரசியல் கட்சி வேறுபாடுகளைப் பார்ப்பது கிடையாது. இது ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் ஓர் ஆட்கொல்லி நோயாகும். ஆகவே, நாம் அனைவரும் எமது வேறுபாடுகளைக் கடந்து டெங்கு எனும் இந்த ஆட்கொல்லியை முற்றாக ஒழித்துக்கட்ட ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என்று வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் விசேட அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான முஷர்ரஃப் முத்துநபீன், கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான றஹ்மத் மன்சூர், கட்சியின் அம்பாரை மாவட்டச் செயலாளர் ஏ.சீ.சமால்டீன், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான முன்னாள் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.பாயிஸ், ரினாஸ், ஏ.சி.நியாஸ், அஸ்வர் சாலி, முன்னாள் உதவித் தவிசாளர் பாறூக் நாஜி, செயற்றிட்ட முகாமையாளர் எம்.ஐ. ஸாஹிர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.கலீல், தொழிலதிபர் ஏ.கே.அமீர், அட்டாளைச்சேனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எச்.பௌமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.