Top News
| பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் | | காரைதீவு பிரதேசத்தின் துரித அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராய்வு |
Aug 30, 2026

காரைதீவு பிரதேசத்தின் துரித அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராய்வு

Posted on August 28, 2026 by Admin | 86 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

காரைதீவு பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச செயலாளர் ஜி. அருணன் அவர்களின் நேர்த்தியான ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தின் போது காரைதீவு பிரதேசத்தின் நீண்டகாலத் தேவைகளாகக் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், வீதி அபிவிருத்தி மற்றும் சீரான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளாலும் அதிகாரிகளாலும் விரிவாக ஆராயப்பட்டன.

மக்கள் எதிர்நோக்கும் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவற்றுக்கான துரித தீர்வினைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுக்கு அபிவிருத்திக் குழுத் தலைவரினால் பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், இவ்வாண்டுக்கான அரச நிதியினைப் பயனுள்ள வகையில் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பிலும் இதன்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. மக்களின் அடிப்படைத் தேவைகளை எவ்வித தாமதமுமின்றி நிறைவேற்றுவதற்கு அனைத்து அரச திணைக்களங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளால் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் திரு. எஸ். பாஸ்கரன் ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். அத்துடன், பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பல்வேறு அரச திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளும் இதில் பிரசன்னமாகியிருந்தனர்.