Top News
| பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதா? வெளிவந்த உத்தியோகபூர்வ தகவல்! | | ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம் | | காரைதீவு பிரதேசத்தின் துரித அபிவிருத்தி குறித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராய்வு |
Aug 30, 2026

ஆலங்குளம் றஹ்மானியா வித்தியாலயத்திற்கு கிடைத்த இருமாடிக் கட்டடம்

Posted on August 28, 2026 by Admin | 152 Views

(ஆலங்குளம் செய்தியாளர் -ஆரிப்)

அட்டாளைச்சேனை, ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலய வளாகத்தில் அமைந்திருந்த பல்தேவைக் கட்டடத்தில் கடந்த 15 வருடங்களாக தற்காலிகமாக இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை அதன் சொந்தக் கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த வைத்தியசாலை இயங்கி வந்த இரண்டு மாடிகளைக் கொண்ட பல்தேவைக் கட்டடம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இக் கட்டடத்தை பாடசாலையின் பயன்பாட்டுக்கு வழங்கும் ஆவணங்களை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அப்கர் அவர்கள் ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலயத்தின் சிரேஷ்ட ஆசிரியர் பி.எம். ஆரிப் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

ரஹ்மானியா வித்தியாலயத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மாணவர் தொகையினால் நீண்டகாலமாகப் பாரிய வகுப்பறைப் பற்றாக்குறை நிலவி வந்தது. தற்போது இந்த இருமாடிக் கட்டடம் பாடசாலைக்கு மீளக் கிடைத்ததன் ஊடாக, அப்பற்றாக்குறை கணிசமான அளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இனி எவ்வித இடர்ப்பாடுகளுமின்றிச் சிறப்பாக இடம்பெறும் எனப் பெற்றோரும் பிரதேச கல்விச் சமூகத்தினரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இந்தக் கட்டடத்தை பாடசாலைக்கு மீளப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு அளப்பரியதாகும். குறிப்பாக, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதற்கான முன்மொழிவுகளை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் இரு தடவைகள் தொடர்ச்சியாக முன்வைத்து, உரிய அனுமதியைப் பெற்றுக்கொடுத்தார். இந்தப் பாரிய முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இக்கட்டடத்தை எப்படியாவது பாடசாலைக்கு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஆலங்குளம் ரஹ்மானியா வித்தியாலயத்தின் அதிபர் கே.எல். முனாஸ் அவர்கள் பல்வேறு மட்டங்களில் பல அர்ப்பணிப்பான முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்நடவடிக்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய வலயக் கல்விப் பணிப்பாளர் பி.எம்.வை.அறபாத், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ரஸ்மி, முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ரஹ்மத்துல்லா, பிராந்திய சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் செயற்குழு (SDEC), பழைய மாணவர் சங்கம் (OBA) உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.