Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 15 வருட கால வரலாற்றை முறியடித்து சாதனை

Posted on September 4, 2026 by Admin | 337 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அண்மையில் வெளியான 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் பிரகாரம், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் கடந்த 15 வருட கால வரலாற்றை மாற்றிப் புதிய கல்விச் சரித்திரம் படைத்துள்ளது.

இம்முறை நடைபெற்ற பரீட்சையில் அம்பாறை மாவட்ட வெட்டுப்புள்ளியான 133 புள்ளிகளைத் தாண்டி 08 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கும், அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கும் மாபெரும் பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரான 15 வருடங்களில் (2011-2026) பாடசாலை பெற்றுக்கொண்ட ஆகக்கூடிய சித்தி வீதம் (21%) இதுவாகும் என்பது பாடசாலையின் தரவுப் பகுப்பாய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பரீட்சையில் பாடசாலை மிகச் சிறந்த அடைவுமட்டத்தைப் பதிவு செய்துள்ளது. இம்முறை 39 மாணவர்கள் விண்ணப்பித்து 38 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில் 36 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 95 சதவீத சித்தியைப் பதிவு செய்து பிரம்மிக்க வைத்துள்ளனர். அத்துடன், 21 மாணவர்கள் (55 வீதம்) 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலையின் ஒட்டுமொத்த பெறுபேற்றை உயர்த்தியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது வெறுமனே ஓரிரவில் கிடைத்த ஒன்றல்ல. அதிகாலை முதல் இரவு வரை தங்களின் நேரத்தை அர்ப்பணித்து மாணவர்களின் எதிர்காலத்துக்காக உழைத்த ஆசிரியர்களின் வியர்வையும், பிள்ளைகளின் வெற்றிக்காகப் பல தியாகங்களைச் செய்த பெற்றோர்களின் தொடர்ச்சியான ஊக்கமும், சிறு வயது முதலே இலக்கை நோக்கி அயராது உழைத்த மாணவர்களின் விடாமுயற்சியுமே இந்த 15 வருடச் சாதனையை உடைக்க அடித்தளமாக அமைந்துள்ளதாக கல்விச் சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பாடசாலையின் இந்த வெற்றிப் பயணத்திற்குச் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலை வழங்கிய அதிபர் எம்.ஐ. அஜ்மீர் அவர்களின் சிறப்பான முகாமைத்துவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அத்துடன், பிரதி அதிபர்களான ஆர். ஜப்ராஸ் மற்றும் ஏ.ஏ. பனீஸ் ஆகியோரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் பாடசாலையின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளன. குறிப்பாக மாணவர்களைத் தம் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி அர்ப்பணிப்புடன் கற்பித்து நெறிப்படுத்திய தரம் 5 ஆசிரியர்களான திருமதி. எஸ்.எல். பர்ஸானா, கே.எல்.எம். றபீக் மற்றும் எம்.ஏ. சலாஹூதீன் ஆகியோரின் மகத்தான சேவை பிரதேச மக்களால் பெரிதும் விதந்துரைக்கப்படுகிறது.

இச்செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய ஆரம்பப் பிரிவுக்கான வலயத் தலைவர் எஸ்.எல். தாஜுதீன் மற்றும் பரீட்சைக்கான திட்டங்களைச் செவ்வனே ஒருங்கிணைத்துச் செயற்பட்ட ஆசிரியர் ஏ.டபிள்யு. நிஹார் ஆகியோரின் பங்களிப்பும் இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்டுள்ளன.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் இந்தச் சாதனைப் பயணம் மென்மேலும் தொடரவும், கல்வியில் இந்தப் பாடசாலை பல சிகரங்களைத் தொடவும் கல்வி அதிகாரிகள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் எனப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்