Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

அம்பாறை மாவட்ட ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து தேசிய மட்டத்திற்குத் தெரிவானார் ஆசிரியர் ஆர்.நௌசாத்

Posted on November 10, 2026 by Admin | 116 Views

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் ‘ஜெவலின் பியெஸ்டா 2026’ (Javelin Fiesta 2026) ஈட்டி எறிதல் தொடரின் அம்பாறை மாவட்ட மட்டப் போட்டிகளில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஆர்.நௌசாத் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) நடைபெற்ற இப்போட்டியின் ஆண்களுக்கான திறந்த பிரிவில் (Open Men’s Category) போட்டியிட்ட அட்டாளைச்சேனையை சேர்ந்தவரும் ஒலுவில் அல் ஹம்றா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியரான ஆர்.நௌசாத் 41.70 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டார்.

மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த திறமையான வீரர்களுடன் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பதிவு செய்த அவருக்கு தங்கப் பதக்கமும் வெற்றியீட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இந்த அபார வெற்றியின் மூலம் விரைவில் நடைபெறவுள்ள தேசிய மட்ட ஈட்டி எறிதல் போட்டியில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்கும் தகுதியையும் அவர் பெற்றுள்ளார்.

கிராமப்புற மற்றும் மாவட்ட மட்டங்களில் மறைந்திருக்கும் ஈட்டி எறிதல் திறமைகளை அடையாளம் கண்டு அவர்களை தேசிய மற்றும் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லும் நோக்கில் ‘ஜெவலின் பியெஸ்டா’ போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உடற்கல்வியைப் போதிக்கும் ஆசிரியர் ஒருவர் தானே களத்தில் இறங்கி மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளமையானது பாடசாலை மாணவர்களுக்கும் இளம் விளையாட்டு வீரர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இவரது இந்தச் சாதனைக்கு கல்விப் புலத்தினரும், பிரதேச விளையாட்டுக் கழகங்களும், பொதுமக்களும் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.