எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் (Evertop Sports Club) 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ‘எவர்டொப் நைட் கப் – 2026’ (Evertop Night Cup 2026) மாபெரும் இரவுநேர மின்னொளி கிரிக்கெட் தொடரில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் (Marksman) விளையாட்டுக் கழகம் தனது அபார ஆட்டத்திறனாலும் கடின உழைப்பாலும் இரண்டாம் இடத்தைத் (Runner-up) தமதாக்கிப் பெருமை சேர்த்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய இரவுநேர கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக 5 ஓவர்கள் கொண்ட விலகல் (Knockout) முறையில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் 48 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுத் தமது திறமைகளை வெளிப்படுத்தின. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் முதலே அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணியின் வீரர்கள் தமது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, அதிரடித் துடுப்பாட்டம் மற்றும் சுறுசுறுப்பான களத்தடுப்பின் மூலம் பல சவாலான அணிகளை வெற்றிகொண்டு முன்னேறினர்.
வீரர்களின் அயராத உழைப்பும், கழக நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டலும் அணியை அரையிறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றது. ஆரம்பச் சுற்றுப் போட்டிகளின் முடிவில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் (Marksman SC) அணியுடன், அக்கரைப்பற்று சினாத் டிராவல்ஸ் (Sinath Travels SC), ஒலுவில் லெவன் ஸ்டார் (Eleven Star SC) மற்றும் அக்கரைப்பற்று டிரிபிள் பி (Trible B SC) ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தன. அரையிறுதிப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திய மார்க்ஸ்மேன் அணி அபார வெற்றியைப் பதிவு செய்து இறுதிப் போட்டிக்குள் கால்பதித்தது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகமும் ஒலுவில் லெவன் ஸ்டார் அணியும் மோதின. இறுதிவரை விட்டுக்கொடுக்காத போராட்ட குணத்துடன் மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ஸ்மேன் அணி இரண்டாம் இடத்தைப் பெற்று ரன்னர்-அப் கிண்ணத்தைத் தமதாக்கியது. இப்போட்டியில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி சம்பியன் கிண்ணத்தை வெற்றிகொண்ட போதிலும் 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் முழுவதும் மார்க்ஸ்மேன் அணி காட்டிய கூட்டு முயற்சியும் சிறப்பான ஆட்டமும் வருகை தந்திருந்த கிரிக்கெட் ரசிகர்களின் பலத்த பாராட்டுகளைப் பெற்றது.
1996ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எவர்டொப் விளையாட்டுக் கழகமானது கடந்த மூன்று தசாப்தங்களாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் முன்னேற்றம் மற்றும் விளையாட்டின் ஊடாக சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றது. அக்கழகத்தின் 30 ஆண்டுகாலப் பயணத்தைச் சிறப்பிக்கும் வகையிலும், கழகங்களுக்கிடையிலான நட்புறவை வளர்க்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய மாபெரும் மேடையில் மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகம் தனது முத்திரையைப் பதித்து அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளது.
இத்தொடரின் இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் இரண்டாம் இடத்தைத் தமதாக்கிய அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் அணிக்கும், சம்பியன் பட்டம் வென்ற அணிக்கும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.


