அம்பாறை மாவட்ட விவசாயிகளின் நலன்களைக் கருத்திற்கொண்டும், சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர்ப்பாசனக் கட்டமைப்பின் தற்போதைய நிலை குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை நாளை (08) பாராளுமன்றத்தில் துறைசார் அமைச்சரிடம் விசேட கேள்விகளை எழுப்பவுள்ளார்.
நீர்மட்டக் கொள்ளளவு, கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கான தடையற்ற நீர்ப்பாசன வசதி ஆகிய மூன்று பிரதான விடயங்களை மையப்படுத்தி அவர் இந்தக் கேள்விகளைச் சபையில் முன்வைக்கவுள்ளார்.
1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1953 இல் நிறைவுசெய்யப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல்ஓயா திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சேனாநாயக்க சமுத்திரத்தின் ஆரம்பக் கொள்ளளவு 770,000 ஏக்கர் அடி (Acre Feet) என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதைய காலப்பகுதியில் இந்நீர்த்தேக்கத்தில் எவ்வளவு ஏக்கர் அடி நீர் சேமிக்கப்படுகின்றது என்பது தொடர்பான தெளிவான விளக்கத்தை உதுமாலெப்பை எம்.பி. அமைச்சரிடம் கோரவுள்ளார்.
1992 ஆம் ஆண்டு தொடக்கம் சேனாநாயக்க சமுத்திரத்தின் பிரதான அணைக்கட்டு, மதகுக் கோபுரம், மதகு உருளைகள், நீர் வெளியேற்றும் கட்டமைப்பு மற்றும் வான் வழிப்பாதை ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மற்றும் பழுதுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நீர்த்தேக்கத்தின் கட்டமைப்பு ரீதியான நிலைத்தன்மை மற்றும் நீண்டகாலப் பாதுகாப்புத் தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளமையைச் சுட்டிக்காட்டும் உதுமாலெப்பை எம்.பி இது தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சபையில் வினவவுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான விவசாயப் பொருளாதாரத்தின் ஆணிவேராக விளங்கும் சேனாநாயக்க சமுத்திரத்தின் ஊடாக சுமார் 170,000 விவசாயக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றன. இக்குடும்பங்களுக்குத் தடையின்றி நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த நீர்த்தேக்கத்தைப் பாதுகாப்பதற்கான விரிவான ஆய்வுகள், முறையான பராமரிப்பு மற்றும் துரித புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் அவர் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.