கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையை களைந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் மகா சங்கத்தினரின் பங்குபற்றலுடன் மாபெரும் பாதயாத்திரையொன்று இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
இப்பாதயாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னதாக கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத பூஜைகள் இடம்பெற்றன. ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலிருந்து ஆரம்பமான இந்தச் சாத்வீகப் போராட்டம் ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வண. உலப்பனே சுமங்கல தேரர், ஞானசார தேரருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் தன்னிச்சையாக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
“கடந்த காலத்தில் தேசத்தினதும், பௌத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காக வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் எவ்வாறு குரல்கொடுத்தாரோ, அதேபோன்று ஞானசார தேரரும் நாடு, இனம், சாசனத்தின் நலனுக்காகவே குரலெழுப்பினார். அவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காகச் சிறைக்குச் செல்லவில்லை. ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் சாசனத்துக்காகவுமே அவர் தற்போது சிறைத்தண்டனை அனுபவிக்கின்றார். எனவே, அவரைத் தனிமைப்படுத்தாது அவருக்காக நிபந்தனையின்றி முன்னிற்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்” எனச் சுட்டிக்காட்டினார்.
ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் வரை அநீதிக்கு எதிரான இப்போராட்டம் எவ்விதத்திலும் கைவிடப்பட மாட்டாது என வலியுறுத்திய சுமங்கல தேரர், நிலவும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் வன்முறையற்ற முறையில் முன்னெடுக்கப்படும் இப்பாதயாத்திரையில் அனைத்து மக்களையும் ஒன்றிணையுமாறும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.