Top News
| அட்டாளைச்சேனை கூட்டத்தில் ஊடகவியலாளர்களை விரட்டி ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த ஆதம்பாவா எம்பி | | தேசிய உற்பத்தித்திறன் பாராட்டு விருது பெற்று அட்டாளைச்சேனைக்கு பெருமை சேர்த்த ஸஹ்ரா வித்தியாலயம் | | அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் 2027 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல் |
Oct 15, 2026

அக்கரைப்பற்று ஆசிரியை றுஸைனா ஹாஷிமுக்கு ‘குருபிரதீபா பிரபா 2026’ தேசிய விருது

Posted on October 12, 2026 by Admin | 71 Views

(எம்.ஜே.எம்.சஜீத்)

கல்வி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ‘குருபிரதீபா பிரபா 2026’ தேசிய விருதினை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப (Biosystems Technology) பாட ஆசிரியை றுஸைனா ஹாஷிம் வென்றுள்ளார்.

இவ்வருடம் நாடு முழுவதிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 62 சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இவ்விருதைப் பெற்ற ஒரேயொரு முஸ்லிம் பெண் ஆசிரியை என்ற பெருமையை றுஸைனா ஹாஷிம் தனதாக்கியுள்ளார்.

இந்த விருது வழங்கும் விழா கடந்த 6ஆம் திகதி கொழும்பு மருதானை ஆனந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில், கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜி.எஸ். நாலக கலுவேலவினால் ஆசிரியை றுஸைனா ஹாஷிமுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

B.Sc. (Hons), M.Sc. மற்றும் PGDE ஆகிய உயர்கல்வித் தகைமைகளைக் கொண்டுள்ள இவர், தற்போது உயிர்முறைமைகள் தொழில்நுட்பத் துறையில் M.Phil. ஆய்வுக் கற்கையையும் மேற்கொண்டு வருகிறார். இவரது அர்ப்பணிப்பான கற்பித்தலின் மூலம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய உயிர்முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் 100 சதவீத சித்தியைப் பதிவு செய்துள்ளனர். அத்துடன், 2024 இல் விவசாய விஞ்ஞானப் பாடத்திலும் 100 சதவீத தேர்ச்சியினை இவர் பெற்றுக்கொடுத்துள்ளதோடு, கணிசமான மாணவர்களை சிறப்புச் சித்திகளுடன் பல்கலைக்கழகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளராகவும், தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தவராகவும் திகழும் ஆசிரியை றுஸைனா ஹாஷிம், இலக்கியத் துறையிலும் தடம் பதித்தவராவார். தமிழ், ஆங்கில மொழிகளில் கவிதை, சிறுகதைகளை எழுதி வரும் இவர், கலாசார அமைச்சினால் அரச ஊழியர்களுக்காக வழங்கப்படும் ஆக்கத்திறன் விருதையும் வென்றுள்ளார். பாடசாலை மாணவர்களைப் பல்வேறு கலாசார, மீலாத் போட்டிகளில் ஈடுபடுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ள இவரது இலக்கியப் படைப்புகள் ‘தினகரன்’ பத்திரிகை உட்பட பல சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், பிறை FM வானொலியிலும் ஒலிபரப்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று முஸ்லிம் சமூகத்தின் முதல் ஆசிரியரும் அதிபருமான மர்ஹூம் முகம்மது தம்பியின் பேரப் பிள்ளையான இவர், ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர் முகம்மது ஹாஷிமின் புதல்வியாவார். இவரது சகோதரரான கலாநிதி முகம்மது அஷ்மல், ஐக்கிய இராச்சியத்தின் கார்டிப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். பாரம்பரியமிக்க கல்விப் பின்னணியைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்து இவர் பெற்றுள்ள இந்தத் தேசிய விருது, அக்கரைப்பற்று கல்விச் சமூகத்திற்கும் அவர் கற்பிக்கும் பாடசாலைக்கும் பாரிய கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளது.