அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குட்பட்ட தீகவாப்பி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வரும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை முன்னிட்டு விரைவில் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் லால் காந்த தலைமையில் அண்மையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதேச மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனத்திற்குக் கொண்டுவந்தார்.
குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணிகள், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் (LRC) சொந்தமான காணிகள் மற்றும் தீகவாப்பி கிராம மக்களின் காணிப் பிணக்குகள் குறித்து எம்.பி. உதுமாலெப்பை கூட்டத்தில் விரிவாக எடுத்துரைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் இக்கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையிலேயே, தீகவாப்பி கிராம மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான விசேட நடமாடும் சேவையொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக காணி ஆணையாளர் நாயகம் கூட்டத்தில் உறுதிபடத் தெரிவித்தார்.