Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 14, 2026

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் உடற்கல்வி கற்கை நெறி 14 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க பிரதமர் பணிப்புரை

Posted on October 13, 2026 by Admin | 55 Views

கடந்த 2012ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்ட அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் உடற்கல்வி கற்கை நெறியை அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை விடுத்த விசேட கோரிக்கையை அடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கல்விக் கல்லூரிகளின் பிரதம ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் 1992இல் இலங்கையின் முதலாவது தமிழ் மொழிமூல தேசிய கல்விக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரி தற்போது 6 பிரதான பாடநெறிகளை வெற்றிகரமாக வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஆரம்பம் தொட்டு இடம்பெற்று வந்த உடற்கல்வி கற்கை நெறியானது தகுதிவாய்ந்த விரிவுரையாளர் பற்றாக்குறை காரணமாக 2012இல் இடைநிறுத்தப்பட்டது.

தற்போது தமிழ் மொழி மூலமான உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி வவுனியா (04 விரிவுரையாளர்கள்), யாழ்ப்பாணம் (02 விரிவுரையாளர்கள்) மற்றும் மட்டக்களப்பு (03 விரிவுரையாளர்கள்) ஆகிய தேசிய கல்விக் கல்லூரிகளில் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, அட்டாளைச்சேனையில் இக்கற்கை நெறியை மீளவும் ஆரம்பிப்பதற்கு மேலதிக விரிவுரையாளர்கள், விடுதி வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் 2026 ஒக்டோபர் காலப்பகுதியில் மாணவர்களை இணைத்துக் கொள்ளும் போது இதனை மீள ஆரம்பிக்க முடியும் எனவும் ஆணையாளர் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது சபையில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஆணையாளரின் அறிக்கையிலுள்ள வளப்பற்றாக்குறை குறித்த விடயங்களுக்குத் தெளிவான விளக்கமளித்தார்.

“கௌரவ பிரதமர் அவர்களே, அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகிய இரண்டிலும் உடற்கல்வி பாடத்திற்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானங்கள், பார்வையாளர் அரங்குகள் மற்றும் போதுமான விடுதி வசதிகள் காணப்படுகின்றன. அத்துடன் இரண்டு நிறுவனங்களிலும் தலா ஒரு உடற்கல்வி விரிவுரையாளர் வீதம் உள்ளனர். எனவே, வளப்பற்றாக்குறை எனக் கூறி காலதாமதம் செய்யாமல் அடுத்த வருடமே இக்கற்கை நெறியை மீள ஆரம்பிக்க விசேட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

இக்கோரிக்கை தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதனையடுத்தே அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் இடைநிறுத்தப்பட்டுள்ள உடற்கல்வி கற்கை நெறியை அடுத்த வருடம் மீள ஆரம்பிப்பதற்கான ஆக்கபூர்வமான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்குப் பிரதமர் பணிப்புரை வழங்கியுள்ளார்.