அம்பாறை மாவட்டத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளில் நிலவும் சவால்களுக்குத் தீர்வு கண்டு செயற்திட்டங்களைத் துரிதப்படுத்தும் நோக்கிலான விசேட வீதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபம மங்கள விக்கிரமாரச்சியின் ஏற்பாட்டில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி ஏ.எம்.எம். முத்துமெனிக்க ரத்வத்த தலைமையில் இன்று (14) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்டம் மற்றும் பிரதேச மட்டங்களில் வீதி அபிவிருத்தி தொடர்பில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் தடைப்பட்டுள்ள பணிகளை உடனடியாகத் துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது பணிப்புரை விடுத்தார்.
வீதி புனரமைப்புப் பணிகளுக்குப் பெரும் தடையாக இருந்த காபட் (Asphalt) தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அம்பாறை மாவட்டத்திற்கு 5,000 மெற்றிக் தொன் காபட்டை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சின் அதிகாரி இதன்போது தெரிவித்ததுடன் 2026ஆம் ஆண்டுக்கான கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணிகளில் 47.7 சதவீதமானவை நிறைவடைந்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகளைப் பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒன்பது பாலங்களில் இரண்டு பாலங்களைச் சீன நிறுவனமொன்றின் ஊடாகப் புனரமைக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலதிகமாக ஒலுவில் 4 மகாபொல பயிற்சி நிலைய வீதிப் பாலம் மற்றும் அந்தலோயா–உகனை கொட்டலிந்த பாலம் ஆகிய இரண்டு பாலங்களினதும் நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் கட்டமைப்புப் பணிகள் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திக்கென 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 4,066.54 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதில் 1,260.67 மில்லியன் ரூபா இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தப் பணிகளின் 31 சதவீத நிறைவைக் காட்டுவதாக வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரி தற்போதைய நிலைமைகளை விளக்கியதுடன் அம்பாறை மாவட்டத்தில் பல புதிய பாலங்கள், வீதிகள் அமைப்பதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விசேட கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, அபூபக்கர் ஆதம்பாவா, கே. கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.