சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் அமைச்சரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) ஊடாக சிவப்பு அறிவித்தலை (Red Notice) பெற்றுக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதியைப் பயன்படுத்தி 2014 ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டீ-சேர்ட்டுகளை (T-shirts) பெற்றுக்கொடுத்ததன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்தில் முன்வைத்த மேலதிக விடயங்கள் மற்றும் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே கோட்டை நீதவான் மேற்படி பிடியாணை மற்றும் சிவப்பு அறிவித்தல் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.