இந்தோனேசியாவில் நடைபெற்ற 23 ஆவது சர்வதேச விஞ்ஞான ஒலிம்பியாட் (International Science Olympiad) போட்டியில் இலங்கை சார்பாகப் பங்கேற்ற அக்கரைப்பற்று அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரி மாணவி முகம்மட் ஹஸ்பி அனாபா வெண்கலப் பதக்கத்தைத் (Bronze Medal) சுவீகரித்து தாய்நாட்டுக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அதிசிறந்த இளம் விஞ்ஞானத் திறமையாளர்கள் பங்கேற்ற இச்சர்வதேசப் போட்டியானது இம்முறை இந்தோனேசியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட மாணவி முகம்மட் ஹஸ்பி அனாபா சர்வதேச ரீதியிலான கடும் சவால்களுக்கு மத்தியில் தனது அபார அறிவாற்றலையும் விஞ்ஞானத் திறமையையும் வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளார்.
தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கட்டத் தெரிவுப் போட்டிகளில் சிறப்பாகச் சித்தியடைந்து சர்வதேசப் போட்டிக்குத் தெரிவான இம்மாணவி உலக அரங்கில் அக்கரைப்பற்று மண்ணின் பெயரையும் இலங்கையின் கல்வித் தரத்தையும் நிலைநாட்டியுள்ளார்.
சர்வதேச ரீதியில் சாதனை படைத்து கிழக்கு மாகாணத்திற்கும் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ள மாணவி அனாபாவிற்கு பாடசாலை அதிபர், ஆசிரிய குழாம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேசக் கல்வி அதிகாரிகள் எனப் பலரும் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.