Top News
| இரண்டு வருடங்கள் கடந்தும் நிர்மாணிக்கப்படாத அட்டப்பள்ளம் பாலம்! நாளை பாராளுமன்றத்தில் உதுமாலெப்பை எம்.பி. கேள்வி | | தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பீடாதிபதி அப்துல் முனாஸின் புதல்வர் அய்யாஸ் பொறியியல் பட்டம் பெற்றார் | | அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு |
Oct 24, 2026

அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.ஐ.எம்.றியாஸ் கடமையேற்பு

Posted on October 22, 2026 by Admin | 82 Views

அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல்-ஜென்னாஹ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக, கல்வித்துறையில் பல வருட அனுபவம் வாய்ந்த எம்.ஐ.எம். றியாஸ் நேற்று (21) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இப்பாடசாலையில் இடம்பெற்ற கடமையேற்பு மற்றும் வரவேற்பு நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் கலந்துகொண்டு புதிய அதிபருக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.வை. அறபாத் முகைதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் கிழக்கு மாகாண கல்வி முதலமைச்சின் முன்னாள் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.நஜீட் அஹமட், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.சம்சுதீன், உதவிக் கல்விப் பணிப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். பாயிஸ், பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் சாலிஹ், பிரபல வர்த்தகர் ஏ.சி.எம். சமீர் ஹாஜியார் , ஓய்வுநிலை அதிபர் எம்.ஏ.அன்சார், இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஏ.எல்.யாசீன், ஏ.எல்.எம்.ஹிஸாம் மற்றும் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஐ.எம்.றியாஸ் இதற்கு முன்னர் சம்புநகர் மினா வித்தியாலயத்தின் அதிபராகத் திறம்படக் கடமையாற்றியவராவார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்ட அப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர்களின் சமூக எழுச்சியிலும் அளப்பரிய சேவையாற்றியமைக்காகப் பலராலும் பாராட்டப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கி கல்வித்துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்திருந்த அல்-ஜென்னாஹ் வித்தியாலயம் கடந்த சில வருடங்களாகத் தனது பழைய பொலிவைச் சற்றே இழந்து காணப்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறந்த நிருவாகத் திறனும் அர்ப்பணிப்பும் கொண்ட அதிபர் றியாஸின் வருகையானது பாடசாலைக்கு மீளவும் புத்துயிர் அளிக்கும் என பெற்றோரும் அப்பிரதேச கல்வியியலாளர்களும் பெரும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

புதிய அதிபரின் வழிகாட்டலின் கீழ் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் அல்-ஜென்னாஹ் வித்தியாலயம் மீண்டும் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் துரித வளர்ச்சி காணும் எனப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.