“செயல் வீரன் உதுமாலெப்பை போன்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினரை நான் இதுவரை பார்த்ததில்லை” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜயந்த கருணாதிலக்க புகழாரம் சூட்டியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று(15) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுடனான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்கள்,
“பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையின் பாராளுமன்றச் செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஜயந்த கருணாதிலக்க என்னிடம் மிகுந்த வியப்புடன் பாராட்டிப் பேசினார்.
‘உங்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை போன்ற ஒருவரை நான் இதுவரை கண்டதில்லை. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணிக்கே சபைக்கு வருகை தரும் அவர் மாலை 5.00 மணிக்கு அமர்வுகள் நிறைவடையும் வரை சபையிலேயே தங்கியிருப்பார். அத்துடன், அனைத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டங்களிலும் தவறாது கலந்துகொண்டு மக்கள் பிரச்சினைகள் குறித்துக் குரல் கொடுப்பார். செயற்பாட்டுத் திறன்மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்’ என என்னிடம் தெரிவித்தார்.
எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இத்தகைய அர்ப்பணிப்பான செயற்பாடுகள் கட்சித் தலைமை என்ற ரீதியில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றன” என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்ட போது சபையில் குழுமியிருந்தோர் கைகளைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.