Top News
| இலங்கைச் சட்டத்துறையில் 40 ஆண்டுகள் நிறைவு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் எம்.பி.க்கு பொழியும் வாழ்த்து மழை | | 40,000 புனித குர்ஆன் பிரதிகளை விடுவித்து 83 அரபுக் கல்லூரிகளின் பதிவுத் தடையை நீக்க அவசர நடவடிக்கை | | இலங்கை கிரிக்கெட் புள்ளிக்கணிப்பாளராக நிந்தவூர் அப்துர் ரஹ்மான் தெரிவு |
Nov 20, 2026

தன் மனைவியின் மார்பைத் தொட்ட பொலிஸ் உத்தியோகத்தரை வாளால் வெட்டிய கணவன்

Posted on November 18, 2026 by Admin | 411 Views

தனது மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொண்டார் எனத் தெரிவித்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாளால் வெட்டி காரிலிருந்து வீசிச் சென்ற கணவரை கதிர்காமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் தங்கல்லை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி இரவு செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள கடையொன்றுக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் மீட்டு அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாவது:

சந்தேகநபர் காரை செலுத்திச் சென்றுள்ளதுடன் அவரது மனைவியும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரும் காரின் பின் இருக்கையில் பயணித்துள்ளனர். இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர் தனது மனைவியின் மார்பகத்தைத் தொட்டு அத்துமீறியதைக் கண்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் கதிர்காமம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாளினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கியுள்ளார். பின்னர் படுகாயமடைந்த அவரை காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு சந்தேகநபர் தனது மனைவியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த கதிர்காமம் பொலிஸார் தப்பியோடிய 30 வயதுடைய சந்தேகநபரை கடந்த 15ஆம் திகதி திக்வெல்ல, நில்வெல்ல பகுதியில் வைத்து கைது செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற வேளையில் சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கும் பொலிஸார் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாளையும் குறித்த காரிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன் கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.