Top News
| அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியில் ஹாபிழ்கள் மற்றும் கல்விச் சாதனையாளர் கௌரவிப்பு விழா | | இலங்கை – ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்ற நட்புறவுச் சங்க உதவிச் செயலாளராக உதுமாலெப்பை எம்.பி. தெரிவு | | தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை |
Nov 28, 2026

நாளை நாடு தழுவிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டம்!

Posted on November 22, 2026 by Admin | 84 Views

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (23) நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க அரச சேவையின் பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக நாளை நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இணையாக நாளை முதல் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக ஐக்கிய ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் அமில சந்தருவன் தெரிவித்துள்ளார். நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் இணைந்து ‘தேசிய கறுப்பு எதிர்ப்புப் போராட்டத்தை’ முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பிரதிபலிப்பைப் பொறுத்து எதிர்வரும் வாரத்தில் இந்த நடவடிக்கைகள் முழுமையான வேலைநிறுத்தப் போராட்டமாக மாறக்கூடும் எனவும் கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் நவம்பர் 30 ஆம் திகதியளவில் பாடசாலைக் கட்டமைப்பை மூட நேரிடும் எனவும் அமில சந்தருவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள சுகாதார ஊழியர்களும் நாளைய எதிர்ப்புப் போராட்டத்தில் இணையவுள்ளதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளை நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன், எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணக்கம் கண்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அரச ஊழியர்களின் நாளைய எதிர்ப்புப் போராட்டத்திற்குத் தொழிலாளர் போராட்ட நிலையமும் தனது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக அதன் செயலாளர் துமிந்த நாகமுவ குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக எதிர்வரும் இரண்டு வாரங்களில் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதற்கமைய நாளை அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு முன்பாகப் போராட்டங்களை நடத்துவதற்கும், நவம்பர் 30 ஆம் திகதி சில துறைகளில் ஒருநாள் வேலைநிறுத்தத்தையும், வேறு சில துறைகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தையும் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிட்டால், உழைக்கும் மக்களை அணிதிரட்டி இதனை விடவும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தயாராக உள்ளதாகவும் துமிந்த நாகமுவ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.